ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழுவில், ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் மறைவுக்கு இரங்கல், “வாழ்நாள் சாதனையாளர்” விருது பெற்ற டாக்டர் தம்பிக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது துபை காயல் நல மன்றத்தின் அக்டோபர் மாத செயற்க்குழுக் கூட்டம் இம்மாதம் 05ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, மன்றத்தின் தலைவர் ஜனாப் ஜெ.எஸ்.ஏ.புஹாரி அவர்கள் இல்லத்தில் வைத்து அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மன்றத்தின் மூத்த உறுப்பினரும் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினருமான துணி உமர் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள். எம்.எஸ்.நூஹு சாஹிப் அவர்களின் கிராஅத்துடன் கூட்டம் துவங்கியது.
நகர்நலனுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் நிதியுதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவை குறித்து கூட்டத்தில் மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வாழ்நாள் சாதளையாளருக்கு வாழ்த்து:
சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது கொடுத்து கவுரவிக்கப்பட்ட நமதூர் டாக்டர் தம்பி அவர்களை இம்மன்றம் பாராட்டுவதோடு அவர்கள் மென்மேலும் சாதனைகள் புரிந்து நமது தாயகத்தின் புகழுக்கு மென்மேலும் மகுடங்கள் சேர்க்க வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
தீர்மானம் 2 - ஜக்வா தலைவர் மறைவுக்கு இரங்கல்:
அண்மையில் வஃபாத்தான ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தும், அன்னாரின் மஃபிரத்திர்க்காக துஆ செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 3 - “ஷிஃபா”விடமிருந்து தகவல் எதிர்பார்ப்பு:
நமதூரில் அண்மையில் அமையப்பெற்ற SHIFA என்ற ஒன்றுபட்ட மருத்துவ உதவிக் குழுமம் இடம் இருந்து அதன் அமைப்பும் செயல்பாடுகளும் குறித்த தகவல் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு செயற்குழுவில் ஏற்ற முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மஃரிப் தொழுகைக்குப் பின் தேநீர் விருந்துடன் கூட்டம் துஆவுடன் இனிதே நிறைவேறியது.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |