காயல்பட்டினம் நகராட்சியில் தனிமனித ஆதிக்கம் உள்ளதாகவும், அது களையப்பட வேண்டும் என்றும், கோயமுத்தூரில் நடைபெற்ற ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - அக்கட்சியின் உறுப்பினர் பேசியுள்ளார்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எல்.மூஸா நெய்னா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோயமுத்தூர் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள கீதா ஹாலில், 02.10.2012 அன்று நடைபெற்றது.
கட்சியின் தேசிய தலைவர் சுப்பிரமணிய சாமி தலைமையிலும், தமிழக தலைவர் சந்திரலேகா முன்னிலையிலும் நடைபெற்ற இப்பொழுக்குழுவில், ஊழல் ஒழிப்பு குறித்தும், காயல்பட்டினம் நகராட்சியில் நிலவி வரும் தனி மனித ஆதிக்கம் குறித்தும், காயல்பட்டினத்தைச் சார்ந்த - கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்.டி.முஹம்மத் முஹ்யித்தீன் உரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் வெளிப்படையாக நடைபெறும் இக்குற்றத்தைக் கண்டித்து நகரின் அரசியல் கட்சிகள் எதுவும் குரலெழுப்பாத நிலையில், ஜனதா கட்சி மட்டுமே பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு உண்மை நிலவரத்தை துணிச்சலுடன் விளக்கியதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், காயல்பட்டினத்திலிருந்து கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து, கட்சித் தலைவர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
இக்கூட்டத்தில், ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எல்.மூஸா நெய்னா, காயல்பட்டினம் நகர கிளை தலைவர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் எம்.ஏ.சொளுக்கு, பொதுக்குழு உறுப்பினர் என்.டி.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எல்.மூஸா நெய்னா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |