11ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியும், 12ஆம் வகுப்பு மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 11.00 மணியளவில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியையும், மடிக்கணினியையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி அமைந்துள்ள 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகியோரும் மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினியை வழங்கினர்.
பின்னர் உரையாற்றிய பள்ளி தலைமையாசிரியை, சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகியோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவியர் என்றும், தற்போது பள்ளியில் பயிலும் மாணவியருக்கு இவர்கள் முன்னுதாரணம் என்றும் புகழ்ந்துரைத்தார்.
பின்னர், நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இப்பள்ளியின் 135 மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியும், 2011-2012 கல்வியாண்டின் 133 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்பட்டது. |