ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், “நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணி முதல் 08.30 மணி வரை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வுகள்:
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ‘ஹிதாயா’ அப்துர்ரஹ்மான் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார். அதன் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயற்குழு உறுப்பினர்ளான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் வரவேற்புரையாற்றியதோடு, சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகவுரையாற்றினார்.
கடந்த முறை விருத்தாச்சலம் நகர்மன்றத்தில் நேர்மையான நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு, தவறுகளை தானும் செய்யாமல் - பிறரையும் செய்ய விடாமல் 5 ஆண்டு பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்த கண் மருத்துவ பேராசிரியர் வள்ளுவன் இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் உரை:
விருத்தாச்சலம் நகராட்சியில், அவருக்கு உறுதுணையாக இருந்து நகர்மன்ற நிர்வாகத்தை சிறப்புற செயல்படுத்திட உறுதுணை புரிந்த விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மாப்பிள்ளை முஹ்யித்தீன் இக்கருத்தரங்கில் துவக்க உரையாற்றினார்.
ஒரு நேர்மையான நகர்மன்ற நிர்வாகத்தை நடத்திட டாக்டர் வள்ளுவன் மேற்கொண்ட அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் தான் துணை நின்ற நிகழ்வுகள், அதற்காக பட்ட சிரமங்கள் குறித்த தனது அனுபவங்களை அவர் தனதுரையில் பகிர்ந்துகொண்டார். அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது.
இரண்டாம் அமர்வு:
மஃரிப் தொழுகைக்குப் பின், மாலை 06.45 மணியளவில் துவங்கிய அமர்வில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் காயல்பட்டினம் கிளையின் துவக்கம் மற்றும் செயற்பாடுகள் குறித்து, நிகழ்ச்சி நெறியாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா விளக்கிப் பேசினார்.
டாக்டர் வள்ளுவன் உரை:
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான - விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் - கண் மருத்துவ பேராசிரியர் டாக்டர் வள்ளுவன் சிறப்புரையாற்றினார்.
ஒரு நகராட்சியிலுள்ள தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உரிமைகள், தகுதிகள், கடமைகள் குறித்தும், பத்திரப்பதிவு அலுவலகம், தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்ட அரசு - அரசு சாரா இயந்திரங்கள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும், அவற்றில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிவகைகள் குறித்தும், நடைபெறும் முறைகேடுகளைக் களைவதற்கான நடைமுறைகள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நன்மைகள், அதனைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
கேள்வியும் - விளக்கமும்...
அதனைத் தொடர்ந்து, கருத்தரங்க தலைப்பு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எழுத்து மூலம் பெறப்பட்ட கேள்விகளை ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஒவ்வொன்றாக வாசிக்க, டாக்டர் வள்ளுவன் அவற்றுக்கு சட்ட சான்றுகளுடன் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற கேள்விகள் சிலவும், அவற்றுக்கு டாக்டர் வள்ளுவன் அளித்த விளக்கங்களும் பின்வருமாறு:-
கேள்வி: தவறு செய்யும் நகர்மன்ற ஊழியர் மீது - தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் எவ்வாறு புகார் அளிக்கலாம் / நடவடிக்கை எடுக்கலாம்?
விளக்கம்: தவறு செய்யும் நகர்மன்ற ஊழியர்கள் மீதான புகார்களை நகர்மன்றத் தலைவர், ஆணையர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.), மாவட்ட ஆட்சியர், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் (சி.எம்.ஏ.) உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கலாம்.
அரசு அதிகாரிகள் - அலுவலர்கள் செய்யும் தவறுகளுக்காக, பாராளுமன்றத்தின் பிரதமர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சட்டமன்றத்தின் முதலமைச்சர் உள்ளிட்டவர்களோ நடவடிக்கை எடுப்பது போல் நகர்மன்றத் தலைவர் நேரடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதே நிலை. எனவேதான், அனைத்துத் துறைகளையும் விட நகராட்சி நிர்வாகங்களில் தவறுகள் துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தவறுகளுக்காக அவர்களது மேலதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டாலும் கூட, பெரும்பாலும் அவர்களும் அவர்கள் இனத்திற்கு சாதகமாகவே செயல்படும் நிலையுள்ளது.
எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் தவறுகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்த இயலும். நகராட்சி அதிகாரிகளின் நிர்வாகக் குறைபாடுகளை முற்றிலுமாகக் களைய வேண்டுமெனில், பாராளுமன்றம் - சட்டமன்றத்திற்கு உள்ளது போன்ற அதிகாரம் நகர்மன்றத்திகும் இருக்க வேண்டும். இது குறித்து நான் பதவியேற்ற காலம் முதல் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
கேள்வி: நகராட்சி ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க நகர்மன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
விளக்கம்: அவ்வாறு செய்ய அதிகாரமில்லை.
கேள்வி: நகர்மன்றத்தின் சாதாரண - அவசர கூட்டங்களில் பார்வையாளர்கள் கலந்துகொள்ளலாமா?
விளக்கம்: நகராட்சி நிர்வாகம் என்பது மக்கள் வரிப்பணத்தில் நடப்பதாகவும். எனவே, நகராட்சியில் நடைபெறும் எந்தக் கூட்டமானாலும் - அரசு சட்ட விதிகளின்படி, பார்வையாளர்கள் கலந்துகொள்ள முழு உரிமையுண்டு.
நான் விருத்தாச்சலம் நகர்மன்றத் தலைவராக இருக்கையில், எனது இருக்கையின் மேலே,
“இந்த நகர்மன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுவதாகும்!
இங்கு அவர்களே எஜமானர்கள்!!”
என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளேன். இன்றளவும் அந்த வாசகம் அப்படியே உள்ளது.
நகர்மன்றக் கூட்டங்களில் பார்வையாளர்கள் கலந்துகொள்ள அனுமதியிருக்கிறது என்றாலும், அக்கூட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கவனிக்கலாம் என்பதைத் தவிர அவர்கள் கருத்து சொல்லவோ, கேள்வி கேட்கவோ, கூட்ட அரங்கினுள் கூச்சலிடவோ அனுமதியில்லை. அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களை வெளியேற்ற நகர்மன்றத் தலைவருக்கு முழு அதிகாரமுண்டு.
கேள்வி: அரசு விலையில் நியாயமான முறையில் டெண்டர் எடுத்து, பணி செய்ய வாய்ப்புள்ளதா?
விளக்கம்: வாய்ப்புள்ளது. எங்கள் பொறுப்புக் காலத்தின்போது அதுபோன்று பல பணிகளை அரசு விலையில் நியாயமான முறையில் நாங்கள் டெண்டர் எடுத்து செய்துள்ளோம்.
கேள்வி: உள்ளூரில் வேலைதேடும் பட்டதாரிகளை நகராட்சி பணிகளில் அமர்த்த வழி உண்டா?
விளக்கம்: அவர்களை தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை. நான் விருத்தாச்சலம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, பல்வேறு பணிகளுக்கு தற்காலிகப் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நாங்களாகவே வைத்துக்கொண்டு பல பணிகளை செய்து முடித்துள்ளோம்.
கேள்வி: நகராட்சியின் வங்கி கணக்குகள் எத்தனை, அவற்றில் பணம் எவ்வளவு உள்ளது, யார் யாருக்கு செக் வழங்கப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் ரகசியமா? அவற்றை மக்கள் தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாமா?
விளக்கம்: மக்கள் பணம் என்பதால் இதில் ரசகியம் எதுவுமில்லை. நகர்மன்றத் தலைவர் / உறுப்பினர்கள் தேவைப்படும்போது கடிதம் அளித்து அத்தகவல்களை நேரடியாகப் பார்வையிடலாம். தெரிந்த தகவல்களை அவர்கள் பொதுமக்களுடன் பகிர்ந்தகோள்ளலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அத்தகவல்களை ஆவணங்களாகவும் பெறலாம்.
கேள்வி: நகர்மன்றத் தலைவர் எல்லா விஷயங்களையும் உறுப்பினர்களின் அனுமதி பெற்றுதான் செய்யவேண்டுமா?
விளக்கம்: பெரும்பாலும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றாலும், நகர்மன்றத் தலைவருக்கு சட்டம் அளித்துள்ள சில தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவைகளைப் பொருத்து அவர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
கேள்வி: நகர்மன்றக் கூட்டம் நடக்கும்போது ஆணையர் பங்கு என்ன? அவரின் அதிகாரம் அக்கூட்டத்தில் எது வரை உள்ளது?
விளக்கம்: நகர்மன்றக் கூட்டம் என்பது நகர்மன்றத் தலைவரால் நடத்தப்படுவதாகும். ஆணையர் உட்பட எந்த அதிகாரியானாலும், தலைவர் அனுமதிக்கும் வரை மட்டுமே கூட்டத்தில் இருக்க இயலும்.
கேள்வி: பெருவாரியான (மெஜாரிட்டி) நகர்மன்ற உறுப்பினர்கள் ஒரு முடிவெடுக்கும்போது, அதற்கு தலைவரின் உடன்பாடு இல்லை என்றால், அதனை அவர் மினிட் புத்தகத்தில் பதிவு செய்யலாமா?
விளக்கம்: தாராளமாகப் பதிவு செய்யலாம். பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அதுகுறித்த தனது கருத்தை அத்தீர்மானத்தின் ஓரத்தில் குறிப்பிடலாம்.
கேள்வி: நகர்மன்றக் கூட்டத்தை நடத்த தலைவர் இருக்கும் நிலையில், அவரில்லாமல் துணைத்தலைவரோ மற்றவர்களோ கூட்டத்தை நடத்த சட்டத்தில் இடமுண்டா?
விளக்கம்: அவ்வாறு நடத்தவே இயலாது. ஒருவேளை தலைவர் வர இயலாமற்போனால் துணைத்தலைவர் கூட்டத்தை நடத்தலாம். துணைத்தலைவரும் வர இயலாவிட்டால், இதர உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தமக்குள் மூவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவர் மூலம் கூட்டத்தை நடத்தலாம்.
தலைவர் இருக்கும்போது வேறு யாரும் எந்தக் கூட்டத்தையும் நடத்த இயலாது.
கேள்வி: நகர்மன்றக் கூட்டங்களில் இண்டர்நெட் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி உள்ளதா?
விளக்கம்: நகர்மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களையும் அவதானித்து செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி உண்டு.
இவ்வாறாக, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, டாக்டர் வள்ளுவனால் விளக்கமளிக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கருத்தரங்க நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கம் நடைபெற்ற ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், ஐசிஐசிஐ வங்கி முனையிலும், பேருந்து நிலைய வளாகத்திலும் திரளான பொதுமக்கள் திரண்டிருந்து, உரைகளை அவதானித்தனர்.
கருத்தரங்க நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், சிறப்பு விருந்தினர் டாக்டர் வள்ளுவனை பார்வையாளர்கள் சூழ்ந்துகொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஏ.எஸ்.புகாரீ, ‘நட்புடன்’ முத்து இஸ்மாஈல், மாஸ்டர் கம்ப்யூட்டர் அப்துல் மாலிக், ஷஃபீயுல்லாஹ், மரைக்கார், ஸதக்கத்துல்லாஹ், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், ஹஸன் இர்ஷாத், ஏ.கே.இம்ரான் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
|