11ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று மதியம் 03.00 மணியளவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் இறைவாழ்த்துப் பாடலை மாணவியர் இணைந்து பாடினர். பள்ளி தலைமையாசிரியையின் வரவேற்புரையைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவியுமான ஐ.ஆபிதா ஷேக் மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
காயல்பட்டினம் நகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “பசுமைக் காயல்” திட்டத்தின் கீழ் சாலையோரங்களிலுள்ள தமதில்லங்களின் முன் மரம் வளர்க்க விரும்பும் மாணவியருக்காக பள்ளி தலைமையாசிரியையிடம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மரம் வளர்த்துப் பராமரிக்க விருப்பமுள்ள மாணவியர் தம் பெற்றோர் இசைவுடன் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், அவர்களின் வீடுகள் முன் பாதுகாப்பு வேலியுடன் மரம் நட்டு தரப்படும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர் அவர் பள்ளி மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்த ஹாஜரா, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினர். இப்பள்ளியின் 136 மாணவியர் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியைப் பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நன்றியுரைக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |