உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த இடத்தை - தனது பொறுப்புக்காலத்திற்குள் வாங்கிடுவதற்காக, அனைவரும் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராகுமாறு, தக்வா பொதுக்குழுக் கூட்டத்தில் தக்வா / இக்ராஃ தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக 30 பேர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
இறையருளால் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வாவின் பொதுக்குழுக் கூட்டம் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில், வாவு ஏ.எஸ்.முஹம்மத் அலீ அவர்களின் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையிலும், இந்தியாவின் காங்கயம் நகரிலிருந்து வருகை தந்திருந்த கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் நூஹ் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து, தக்வா மன்றத் தலைவரும், இக்ராஃ தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
அனைவருக்கும் முன்னுதாரணமான காயலர்கள்...
"வணிகத்தைக் குறிக்கோளாகக் கொண்டு கடல் கடந்து வந்து வாழ்ந்தாலும், பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும் நலவுகள் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று நமதூர் மக்களிடம் உள்ள இந்த உணர்வு தங்களுக்கெல்லாம் முன்னுதாரணமான அம்சமாகும்“ என பலர் சொல்ல நாம் கேள்விப்படுகிறோம்... இந்த ஒப்பற்ற உணர்வின் வெளிப்பாடுதான் தக்வா போன்ற பல்வேறு அமைப்புகளால் உலகம் முழுவதும் மிளிரும் காயல் நல மன்றங்கள்!
யாம் பெற்ற இன்பம் எம் மக்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள செல்வத்திலிருந்து சிறியதொரு தொகையை நம் ஊரில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழில் போன்றவற்றில் பொருளாதார ரீதியாகவும், ஆலோசனை - வழிகாட்டுதல்கள் மூலமாகவும் வழங்கியுதவிடும் உயரிய நோக்கில் இக்ராஃ, கே.எம்.டி. மருத்துவமனை, ஷிஃபா அமைப்பு, பைத்துல்மால்கள் மூலமாகவும் நம் தக்வா இயன்ற அளவு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும் இது மிகக் குறைந்த அளவுதான். நம்மூர் மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாகத் திகழவேண்டும் என்பதே நம் லட்சியமாகும்...
கல்வியில் தன்னிறைவு...
நம் மக்கள் தன்நிறைவு பெறுவதற்கு அடிப்படைத் தேவை கல்விதான்... அந்த கல்வியை நாம் கொடுத்து விட்டால் தன்னிறைவை அடைவது அவர்களுக்கு மிக எளிது. எனவேதான், கல்வியை எளிதாக்கும் நோக்கில், அதற்கென இக்ராஃ உருவாக்கப்பட்டு, உலக காயல் மன்றங்களால் அதன் கல்வித் துறை கூட்டமைப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த இக்ராஃவை பலப்படுத்த வேண்டியது நமது கட்டாயக் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.
இக்ராஃவுக்கு சொந்த இடம்...
அதன் முன்னோடியாக, இக்ராஃவிற்கென - அதன் தேவைக்கேற்ப சொந்த இடம் ஒன்றை வாங்குவதற்குத் தேவையான நிதியாதாரத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது....
இக்ராஃவின் நடப்பாண்டு தலைமைப் பொறுப்பு தக்வா வசம் உள்ள நிலையில், இது விஷயத்தில் நம் மன்றத்திற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.
எனவே, நம்மில் பெரும்பாலான உறுப்பினர்கள், ஒரேயொரு முறை ரூபாய் 15,000 செலுத்தி, இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராவதன் மூலம், இந்த நிதியாதாரத்தை விரைவாக உருவாக்க இயலும்... இதற்காக சென்ற கூட்டத்தில் நான் வைத்த வேண்டுகோளை ஏற்று நம் உறுப்பினர்கள் 12 பேர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராகியுள்ளீர்கள்... இன்னும் அதிகளவில் நம் உறுப்பினர்கள் இணைவதன் மூலம், இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் தக்வா உறுப்பினர்கள்தான் என்ற நிலை உருவாக வேண்டும்... இதுவே எனது ஆசை... இந்த ஆசையை நிறைவேற்றித் தருவீர்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்...
இவ்வாறு, இக்ராஃ / தக்வா அமைப்பின் தலைவரும், பொதுக்குழுக் கூட்ட தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தனதுரையில் தெரிவித்தார்.
செயலர் உரை:
அதனைத் தொடர்ந்து மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
ஒரே அம்சத்தை தொடர்ந்து பேசுவதால் நன்மையே!
இதுநாள் வரை நம் மன்றக் கூட்டங்களில் கே.எம்.டி. மருத்துவமனை பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்... இப்போது இக்ராஃ பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்... என்று நம்மில் பலர் கேட்கின்றனர். நாம் ஒன்றை நன்றாக கருத்திற்கொள்ள வேண்டும்... இவ்வளவு நாளாக கே.எம்.டி. பற்றிப் பேசிப்பேசி, தக்வாவின் பெயரைப் பறைசாற்றும் அளவுக்கு அம்மருத்துவமனைக்கு பிரசவ அரங்கை நாம் கட்டிக் கொடுத்திருக்கிறோம்...
அதே போல, இக்ராஃவின் முழுத் தேவையையும் நம்மால் பூர்த்தி செய்ய இயலாது என்றாலும் கூட, கூடுதல் பங்களிப்பையாவது தர வேண்டுமே என்ற வேட்கையால்தான் அதுகுறித்தும் தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்... ஆனால் பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே நின்றுவிடாமல், ஒவ்வொரு பேச்சும் ஒரு செயல்திட்டமாக உருவெடுக்க வேண்டும்... அப்போதுதான் நாம் எடுக்கும் முயற்சி, செலவழிக்கும் நேரம் - தொகை என அனைத்தும் முழுப் பயனைத் தரும். எனவே, இக்ராஃவிற்குத் தேவைப்படும் இடத்தை வாங்கிடத் தேவையான பொருளாதாரத்தை நாம் முழுமையாக வழங்கிட இயலாமற்போனாலும், அதன் பெரும்பகுதியையாவது நாம் கொடுத்தேயாக வேண்டும் என்பதால்தான் இதுகுறித்து இக்கூட்டத்திலும் தொடர்ந்து பேசப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்...
நம் தலைவர், வாவு சம்சுதீன் ஹாஜி அவர்கள் இக்ராஃவுக்கு தலைவராக இருப்பது இந்த ஒரு வருடம் மட்டுமே! எனவே இந்த ஓர் ஆண்டிற்குள்ளாகவே ஓர் இடத்தை வாங்க அனைத்து முயற்சிகளும் செய்து, இன்ஷா அல்லாஹ் சாதித்து விடவேண்டும் என்ற இலக்கை நாம் வைத்துள்ளோம். அந்த இலக்கை அடைந்திட நம் பங்களிப்பு, அளவில் கூடுதலாக இருந்தால்தான் மற்ற மன்றத்தினருக்கு அது உந்துதலை ஏற்படுத்தும்... நம்முடைய ஆர்வத்தைப் பார்த்து மற்றவர்களும் கூடுதலாக சேரும் வாய்ப்பும் உள்ளது... அதிலும் நமக்கு நன்மை கிட்டும். இன்ஷா அல்லாஹ்!
தற்போது நாம் 60 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய அமைப்பாகத்தான் உள்ளோம் என்றாலும், சாதிப்பதில் நாமும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்... என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
இவ்வாறு, மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார்.
இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக 30 பேர்...
தலைவர் மற்றும் செயலாளர் உரைகளைத் தொடர்ந்து, ஏற்கனவே தக்வாவில் உள்ள 12 ஆயுட்கால உறுப்பினர்கள் தவிர மேலதிகமாக இக்கூட்டத்தில் 18 பேர் - 15,000 ரூபாய் செலுத்தி, தம்மை இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆக, தக்வாவிலுள்ள இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்கள் 30 பேரின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
01. வாவு முஹம்மத் அலீ
02. வாவு உவைஸ்
03. என்.எஸ்.ஹனீஃபா
04. வாவு ஜஃபருல்லாஹ்
05. எஸ்.ஏ.ஆர்.யூனுஸ்
06. மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ
07. எம்.எஸ்.செய்யித் முஹம்மத்
08. ஃபியாஸ் இத்ரீஸ்
09. எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ்
10. வாவு எஸ்.மொகுதூம்
11. வாவு எஸ்.எச்.மொகுதூம்
12. வாவு யு.மொகுதூம்
13. எஸ்.எச்.அப்துல் கஃப்பார் ரிழ்வான்
14. மா.செ.முஹம்மத் ஸஈத்
15. வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
16. தங்கள் எம்.ஏ.சி.செய்யித் இப்றாஹீம்
17. எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப்
18. சோனா முஹம்மத் அப்துல் காதிர்
19. எஸ்.எச்.அபூஸாலிஹ்
20. வி.எஸ்.எஸ்.பஸ்லுல் கரீம்
21. எம்.ஸதக்கத்துல்லாஹ்
22. ஆர்.காஜா நவாஸ்
23. எஸ்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன்
24. டபிள்யு.எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத்
25. ஒய்.எம்.எம்.அபுல் ஹஸன்
26. எஸ்.ஏ.கே.லெப்பைத்தம்பி
27. எஸ்.எச்.மொகுதூம்
28. எம்.எஸ்.முஹம்மத் நூஹ்
29. கே.எஸ்.மொகுதூம் முஹம்மத்
30. எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப்
உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்:
இக்ராஃவிற்கு பரிசீலிக்கப்பட வேண்டிய இடங்கள்...
பின்னர் நடந்த கலந்துரையாடலில், தாய்நாடு ட்ராவல்ஸ் ஸஈத், தீவுத்தெரு - ஸீகஸ்டம்ஸ் சாலை சந்திப்பிலுள்ள - எல்.கே.துவக்கப் பள்ளி அமைந்திருந்த இடத்தை இக்ராஃவிற்கு கேட்டுப் பார்க்கலாம் அல்லது அப்பா பள்ளி, மாட்டுக்குளம் பகுதியில் இடம் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
கூட்டங்களில் கலந்துகொள்ளாதோரிடம் காரணம் கேட்க வேண்டும்...
மேலும், தக்வாவால் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்பிருந்தும் பங்கேற்காமல் இருப்போரிடம் அதற்கான காரணத்தை நாம் அமைப்பு ரீதியாக முறைப்படி கேட்க வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார். அதனை நல்ல யோசனை என்று பாராட்டிய தலைவர், இக்ராஃவிற்காக உறுப்பினர் ஸஈத் தெரிவிக்கும் இடங்களை அதற்குரியவர்களிடம் முறைப்படி கேட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
பொருளாளருடன் துணைக்குழுவினர்...
மன்றத்தின் நிதியாதாரம் சந்தாவில்தான் உள்ளது என்பதால், மன்றப் பொருளாளரின் பணிகளுக்குத் துணையாக சிலரை நியமிக்க வேண்டும் என்று மன்றத் துணைத்தலைவர் தங்ஙள் இப்றாஹீம் தெரிவிக்க, அது ஏற்கப்பட்டு - உறுப்பினர் அப்துல் வஹ்ஹாப், உதவிச் செயலாளர் யூனுஸ் ஆகியோர் இது விஷயத்தில் பொருளாளருக்கு துணைப்பணியாற்ற பொறுப்பளிக்கப்பட்டனர்.
குறுஞ்செய்தி மூலம் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு...
மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கோரி மின்னஞ்சல் மூலமும், நம் நகரின் இணையதளம் மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டும், தாம் பார்க்கவில்லை என சில உறுப்பினர்கள் தெரிவிக்கும் நிலையுள்ளதால், மேலதிகமாக இனி அவரவர் கைபேசிக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பலாம் என்று உறுப்பினர் அப்துல் வஹ்ஹாப் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டு, இனி வருங்காலங்களில் கைபேசி குறுஞ்செய்தி மூலம் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு, என்.எஸ்.ஷேக், கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் ஆகியோர் பொறுப்பளிக்கப்பட்டனர்.
தக்வாவிற்கு தனி இணையதளம்
தக்வாவிற்கென தனி இணையதளம் அல்லது கருத்துப் பதிவு தளம் அமைக்க வேண்டும் என உறுப்பினர் ஃபியாஸ் இத்ரீஸ் தெரிவிக்க, அதனைப் பொறுப்பெடுத்து செய்வதற்கு யாரேனும் முன்வந்தால் செய்யலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உறுப்பினர் ஃபியாஸ் இத்ரீஸ், என்.எஸ்.ஷேக் ஆகியோர் அப்பொறுப்பை தாங்கள் கவனித்துக்கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர்.
புதிய இலச்சினை அறிமுகம்:
பின்னர், உறுப்பினர் வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் உருவாக்கியிருந்த இலச்சினை - தக்வாவின் புதிய இலச்சினையாக தேர்வுசெய்யப்பட்டது.
இலச்சினை விளக்கம்:
நெற்கதிர் - தாய்லாந்து ஆசியாவின் நெற்களஞ்சியம்
மாணிக்கக் கல் - தாய்லாந்தில் விளைவது; காயலர்களின் பாரம்பரிய தொழில் சார்ந்தது
பட்டதாரி உடை - உயர் கல்விக்கு நம் உதவி
மருத்துவ அடையாளம் - மருத்துவ உதவி
வரைபடம் - தாய்லாந்தின் வரை படம்
மூவர்ணம் - இந்திய தேசிய கொடியின் நிறங்கள்
இந்த இலச்சினையை உருவாக்கித் தந்தமைக்காக உறுப்பினர் எம்.என்.காதிர் ஸாஹிபுக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டம் முதற்கொண்டு இனி வருங்காலங்களில் இப்புதிய இலச்சினையையே பயன்படுத்துவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்:
எதிர்வரும் ஹஜ் பெருநாளன்று - பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், பாங்காக் சன் மூன் ஸ்டார் புதிய இல்லத்தில், அன்று பெருநாள் ஒன்றுகூடல் - பகல் உணவுடன் நடைபெறுமென கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நபிகளாரை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்குக் கண்டனம்:
நம் உயிரினும் மேலான கண்மணி நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்து திரைப்படமெடுத்த தயாரிப்பாளர்கள், அதை வெளியிட்ட கூகுள் - யூடியூப் நிறுவனம், அதைக் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் கண்டிக்க மறுத்த அமெரிக்க அரசு ஆகியோருக்கு இம்மன்றம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - “வாழ்நாள் சாதனையாள”ருக்கு வாழ்த்து:
சென்னை - டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தால், “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்ட - நம் மண்ணின் மைந்தர் - குழந்தை நல மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்களை இம்மன்றம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறது.
தீர்மானம் 3 - ஜக்வா தலைவர் மறைவுக்கு இரங்கல்:
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவிற்கு இம்மன்றம் தன் இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் பிழைபொறுப்பு - மஃபிரத்திற்காக துஆ செய்கிறது.
தீர்மானம் 4 - நகர்மன்றத்தினருக்கு வேண்டுகோள்:
நம் காயல் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணக்கமாக செயல்பட்டு, நம் ஊரில் சிறந்த நிர்வாகத்தைத் தருமாறு இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக, கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் நன்றி கூற, ஹாஃபிழ் லியாவுதீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும், திரை மறைவிலிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், வாவு முஹம்மத் அலீ, தங்ஙள் இப்ராஹீம். பாங்காக் ஜெம் ஹவுஸ் நிறுவனத்தார், தாய்நாடு ட்ராவல்ஸ், கே.டி.ஜெம் ஹவுஸ் ஆகியோர் அணுசரணையில் கூட்ட நிகழ்விடத்திலேயே மதிய உணவு விருந்தோம்பல் நடைப்பெற்றது.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்
படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்
[செய்தியில், தீர்மானங்கள் உட்பட கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:24 / 12.10.2012] |