விருத்தாச்சலம் நகர்மன்றத்தில் 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நகர்மன்றத் தலைவராக இருந்த கண் மருத்துவ பேராசிரியர் டாக்டர் வள்ளுவன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் நகரின் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளை 07.10.2012 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் சந்தித்துப் பேசினார்.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட இச்சந்திப்பு நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ‘ஹிதாயா’ அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, விருத்தாச்சலம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவரான கண் மருத்துவ பேராசிரியர் டாக்டர் வள்ளுவன், அந்நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் மாப்பிள்ளை முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் - நகரின் பொதுநல அமைப்பினர் - பொதுமக்கள் ஆகிய அனைவரும் ஒரே கருத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டால், நகரில் மக்கள் நலப் பணிகளை எளிதில் செய்து முடிக்கவியலும் என்றும், இவர்கள் ஒன்றுபடுவதை விட்டுவிட்டு பிரிந்திருந்தால், எந்தக் காரியமும் திருப்திகரமாக நடைபெறாது என்றும் தெரிவித்த அவர்கள், நகர்நலன் கருதி நல்ல செயல்திட்டங்களின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தமதுரையில் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரும், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ரெட் ஸ்டார் சங்க தலைவர் ஷேக் அப்துல் காதிர், அதன் நிர்வாகி ஆஸாத், தாயிம்பள்ளி - சீதக்காதி நினைவு நூலக தலைவர் எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் பங்கேற்றனர்.
டாக்டர் வள்ளுவன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில கலந்துகொண்ட நகர்மன்ற உறுப்பினர்களும், பொதுநல அமைப்பினரும் இடையிடையே சந்தேகங்களைக் கேட்டனர். அவற்றுக்கு, நகராட்சி நிர்வாக சட்ட ஆதாரங்களுடன் அவர் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித், செயலாளர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத் மற்றும் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஏ.எஸ்.புகாரீ, ‘நட்புடன்’ முத்து இஸ்மாஈல், மாஸ்டர் கம்ப்யூட்டர் அப்துல் மாலிக், ஷஃபீயுல்லாஹ், மரைக்கார், ஸதக்கத்துல்லாஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், ஹஸன் இர்ஷாத், ஏ.கே.இம்ரான் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். |