தூத்துக்குடி மாவட்டம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ளி விழா கடந்த மார்ச் மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநில அளவிலான க்ரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு க்ரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட க்ரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான க்ரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலுடன் - தமிழ்நாடு க்ரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்று, தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கோப்பைக்கான மாநில அளவிலான க்ரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களின் அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இரண்டு பிரிவுகளில் தலா 4 அணிகள் லீக் முறையில் மோதும். அதில் முதல் இரண்டிடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. |