நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக காயல்பட்டினத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெகுவாகத் தேங்கிக் காணப்படுகிறது.
காயல்பட்டினம் சித்தன் தெரு உள்ளிட்ட சில தெருக்களில், பழைய சாலைகளை அப்புறப்படுத்தாமல் அடுத்தடுத்து புதிய சாலைகள் போடப்பட்டதால், அங்குள்ள வீடுகள் சில தரை மட்டத்தை விட தாழ்ந்துள்ளது. நடப்பு மழையால், சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து, அங்கிருந்த மக்கள் இருக்க இடமில்லாத அளவுக்கு அவ்வீடுகளுக்குள்ளும், கோட்டைச் சுவருக்குள்ளும் நீர் சூழ்ந்தது.
அதனையடுத்து, அப்பகுதி மக்கள் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அத்தெருவை உள்ளடக்கிய 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் ஆகியோரிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் ஆகியோர் சித்தன் தெருவிற்கு வந்து, பொதுமக்களிடம் குறை கேட்டனர்.
தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த தெரு முழுக்க பள்ளம் தோண்டி வாய்க்கால் வெட்டித் தருமாறு சிலரும், வாய்க்கால் வெட்டுவது பல விபத்துகளை ஏற்படுத்தும் என்பதால் மோட்டார் பம்ப் செட் மூலம் மழை நீரை உடனுக்குடன் உறிஞ்சியெடுக்குமாறு வேறு சிலரும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் அவர்களிடம் பேசிய நகர்மன்றத் தலைவர், மக்கள் நலனுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தர நகராட்சி நிர்வாகம் ஆயத்தமாகவே உள்ளதாகவும், பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். |