தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் தொழில் வணிகத்துறை சார்பில், தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கம், காயல்பட்டினம் நகராட்சியில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பின்னர், மாவட்ட தொழில் மையத்தின் புள்ளியியல் ஆய்வாளர் குமரேசன் அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் - தொழில் முனைவோருக்கான செயல்திட்டங்கள் குறித்து மாவட்ட தொழில் மையத்தன் துணைப் பொறியாளர் சுவர்ணலதா விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, அத்துறையின் பொது மேலாளர் ஞானசேகர், தொழில் முனைவோருக்கான கடனுதவி, மானியம் உள்ளிட்ட உதவித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.
நிறைவில், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
பின்னர், மாவட்ட தொழில் மையம் மூலம கடனுதவி பெற்று தொழில் நிறுவனம் நடத்தி வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவர் தனது அனுபவங்களை நிகழ்வில் பங்கேற்றோருடன் பகிர்ந்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் - கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகிய இரண்டு நகராட்சிகளில், கோவில்பட்டி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட தொழில் மையத்தை நன்கு பயன்படுத்தி கடனுதவிகள் பெற்று தொழில் செய்து வருவதாக கருத்தரங்கில் பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேள்வி நேரத்தில் அதுகுறித்து பேசிய பார்வையாளர்கள், காயல்பட்டினத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் பெருமளவில் வசித்து வருவதாகவும், வட்டி அடிப்படையிலான எந்த கொடுக்கல் வாங்கலும் செய்வதற்கு அவர்களது மார்க்கத்தில் தடையிருப்பதாகவும், எனவே வட்டியில்லா கடனுதவியை அரசு செய்யுமானால், முஸ்லிம் மக்களும் ஆர்வத்துடன் கடனுதவி பெற்று தொழில் துவங்குவர் என்றும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து கடனுதவி திட்டங்களும் வட்டி அடிப்படையில் அமைந்தவையே என்றும், அதனை விரும்பாத பட்சத்தில், கடன் பெறாமல் - அரசின் மானியத் தொகையை மட்டும் பேற்று கூட தொழில் துவங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும், தொழில் செய்ய ஆர்வப்படும் பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி நன்றி கூறினார்.
பின்னர், தொழில் முனைவோர் தனிப்பட்ட முறையில் கேட்ட சந்தேகங்களுக்கு, தேவையான விளக்கங்களை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஞானசேகரன் வழங்கினார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 21:16 / 20.10.2012] |