வடகிழக்குப் பருவமழையையொட்டி காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாத நிலையிலும், ஏற்கனவே பெய்த மழையால் காயல்பட்டினம் சல்லித்திரடு மற்றும் சுலைமான் நகர் என்ற மாட்டுக்குளம் பகுதிகளில் இன்றளவும் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெட்டி கடலை நோக்கி அனுப்புவதற்காக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் சல்லித்திரடு - சுலைமான் நகர் பகுதிக்கு நேற்று காலை 11.30 மணியளவில் முகாமிட்டனர். 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா சார்பாக அவரது உறவினர் பாட்டா சதக் உமரும் உடனிருந்தார்.
சல்லித்திரடு பகுதியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள மழை நீர்த் தேக்கத்தை வெட்டிவிடுவதற்கான முன்முயற்சிகளில் அவர்கள் இறங்கியபோது, அப்பகுதியிலுள்ள தனியார் நில உடமையாளர் ஒருவர் - தனது நிலத்தில் வாய்க்கால் வெட்டக்கூடாது என்று தடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதனையடுத்து, அங்கிருந்து மழை நீரை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு புதிய நகர்மன்றம் பொறுப்பேற்றவுடன் இப்பகுதியில் மழை நீர் தேங்காவண்ணம் நிரந்தரத் தீர்வு காணப்படும் என நகர்மன்றத் தலைவர் கூறிச் சென்றதாகவும், ஆனால் இன்று வரை தீர்வு காணப்படாததால் தாங்கள் நகராட்சி முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சல்லித்திரடு பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதற்கு விளக்கமளித்த நகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் தேங்கும் மழை நீரை கடலுக்கு அனுப்புவதற்காக நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பணிகளும் துவங்கவுள்ள நிலையில், தனியார் நில உடமையாளர்கள் தடுப்பதாலேயே அவற்றை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் - தனக்குச் சொந்தமான நிலப்பகுதியில் மழைநீர் வாய்க்காலை தற்காலிகமாக அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியிருந்த சிலருள் ஒருவர் - மறியல் போராட்டம் என்ற அப்பகுதி மக்களின் கருத்தைத் தொடர்ந்து, “அப்படியானால் எங்கள் பகுதியிலும் வாய்க்கால் வெட்டக்கூடாது... அழகிய முறையில் கேட்டுப் பெற வேண்டியதை போராட்டங்கள் மூலம் சாதிக்க நினைப்பது அம்மக்களின் அறியாமை...” என்று தெரிவித்தார்.
சல்லித்திரடு பகுதியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து மழை நீர் தேங்கியிருப்பது ஒருபுறமிருக்க, சுலைமான் நகரில் குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூறுகையில்...
நம்ம ஊரில் மழை துவங்கிய நாள் முதல் இன்று வரை எங்கள் வீடுகளில் நாங்கள் தங்க இயலவில்லை... வீட்டில் கட்டில் வரை மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது... வீட்டிலுள்ள மின்சாரம் கசிந்து, தண்ணீரில் கால் வைத்தாலே ஷாக் அடிக்கிறது...
வீட்டில் சமையல் செய்ய வழியில்லாத காரணத்தால், ஹோட்டல்களில் காசு கொடுத்து உணவு வாங்கியே பல நாட்களாக சாப்பிட்டு வருகிறோம்... அன்றாடங்காய்ச்சிகளான எங்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது...
உள்ளே நாங்கள் படுப்பதற்கு இடமில்லாவிட்டாலும் கூட பரவாயில்லை... அமர்ந்திருப்பதற்குக் கூட இடமில்லை... இந்நிலையில் ஹஜ் பெருநாளும் வருகிறது... எங்கள் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டதால், எங்கள் பெருநாள் தண்ணீரிலும், கண்ணீரிலும்தான் கழியும்...
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வரும் திங்கட்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் நாளில் - மக்கள் அனைவரும் திரண்டு சென்று மனு அளிக்கவுள்ளோம்...”
இவ்வாறு சுலைமான் நகர் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சுலைமான் நகர் பகுதியில், சுமார் 15 குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், குடியிருக்கத் தகுதியற்று காணப்படுகிறது. |