தமிழக அரசின் சார்பில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த ஆண்டின் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முதற்கட்டமாக தமிழகமெங்கும் மடிக்கணினி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று மாலை 04.30 மணியளவில், மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கவுரவ செயலாளருமான அ.வஹீதா, அதிமுக சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், எல்.கே.பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டே இந்த மடிக்கணினி தமிழக அரசால் வழங்கப்படுவதாகவும், அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் - நல்ல வழிகளில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணுமாறும் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர், மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா மற்றும் மேடையில் வீற்றிருந்தோர் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.
இப்பள்ளியின் 93 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ளதாகவும், முதற்கட்டமாக இன்று 40 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அதிமுக சிறுபான்மைப் பிரிவு நகர செயலாளர் என்.எம்.அஹ்மத், அக்கட்சியின் நகர நிர்வாகிகளுள் ஒருவரான அப்துல் காதிர் என்ற சின்னத்தம்பி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் - மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
அஹ்மத் A.J.முஸ்தஃபா
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |