காயல்பட்டினத்திற்கு அருகிலுள்ள குரும்பூர் பகுதி சுற்றுவட்டாரங்களில், கடந்த பல மாதங்களாக மோட்டார் பம்ப் செட் துணையுடன் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் குரும்பூர் - நல்லூர் சாலையில் வாகனங்கள் செல்ல இயலாத அளவுக்கு சாலைகளில் லாரிகள் நிறுத்தப்பட்டு, நிலத்தடி நீர் உறிஞ்சியெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு எடுக்கப்படும் நிலத்தடி நீர் அருகிலுள்ள தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மூலம் அறிய முடிகிறது.
இப்பகுதிகளில் பெருமளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்கு எதிராக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், 23.10.2012 அன்று (நேற்று) இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சியெடுத்துச் சென்ற 10 டேங்கர் லாரிகளை, மாலை 05.00 மணியளவில், முக்காணி ரவுண்டானா அருகில், ஆறுமுகமங்கலம் குருவட்டம் வருவாய்த்துறை அதிகாரி இசக்கி முருகேஸ்வரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட அரசு அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த வாகனங்களில் சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலத்தடி நீர் அங்கேயே திறந்து விடப்பட்டு பூமியில் விடப்பட்டது.
முன் அனுமதி பெற்று - குறைந்தளவிலேயே நிலத்தடி நீர் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற விதியை மறந்து, தினமும் பல நூற்றுக்கணக்கான லாரிகளில் இதுபோன்று நிலத்தடி நீர் உறிஞ்சியெடுக்கப்பட்டு, தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருவதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |