காயல்பட்டினத்திற்கான புதிய குடிநீர் திட்டம் அமல்படுத்த அறிவிக்கப்பட்ட டெண்டரில் குறைந்த ஒப்பந்தப்புள்ளியினை சென்னை நிறுவனமான
Shriram EPC Limited சமர்ப்பித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க புதிய குடிநீர் திட்ட டெண்டர் - செப்டம்பர் 4 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் திறக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பித்திருந்தனர். அவை சென்னையை சார்ந்த Shriram EPC Limited மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சார்ந்த Megha Engineering and Infrastructure Limited.
கோப்புக்காட்சி
இரண்டு கவர் முறையில் இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் தொழில்நுட்ப தகுதி
(TECHNICAL BID) பரிசீலிக்கப்பட்டது. அதில் இரு நிறுவனங்களும் தகுதியானவையே என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, அந்நிறுவனங்கள்
சமர்ப்பித்திருந்த ஒப்பந்தபுள்ளிகள் (PRICE BID) அக்டோபர் 22 அன்று - காயல்பட்டினம் நகராட்சியில் திறக்கப்பட்டன.
அதில் சென்னையை சார்ந்த நிறுவனம் - Shriram EPC Limited - 29 கோடியே, 59
லட்சத்து, 39 ஆயிரத்து, 402 ரூபாய், 3 பைசா என தனது ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது.
ஹைதராபாத்தை சார்ந்த நிறுவனம் Megha Engineering and Infrastructure
Limited - 30 கோடியே, 2 லட்சத்து, 71 ஆயிரத்து, 277 ரூபாய், 5 பைசா என தனது ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது.
இத்திட்டத்திற்கான நகராட்சியின் மதிப்பீடு 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் ஆகும்.
நகராட்சியின் மதிப்பீட்டை விட Shriram EPC Limited நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி 1 கோடியே, 28 லட்சத்து, 57 ஆயிரத்து, 402 ரூபாய், 3 பைசா (4.54% சதவீதம்) அதிகம். நகராட்சியின் மதிப்பீட்டை விட Megha Engineering and Infrastructure
Limited நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி 1 கோடியே, 71 லட்சத்து, 89 ஆயிரத்து, 277 ரூபாய், 5 பைசா (6.07% சதவீதம்)
அதிகம்.
இந்த இரு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் - விரைவில் நகர்மன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.
பொதுவாக மதிப்பீட்டை விட 5 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளை நகர்மன்றம் பரிசீலிக்கலாம் என்று அரசாணை உள்ளது என்றாலும், ஏறத்தாழ 1.28 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பீட்டை விட அதிகமாக (பெறப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளில்) குறைவான ஒப்பந்தப்புள்ளி உள்ளதால், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் பங்களிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கான இந்த கூடுதல் தொகை, எவ்வாறு ஈடு செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
குறைந்த விலைப்புள்ளி சமர்ப்பித்துள்ள Shriram EPC Limited நிறுவனம் -
தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டமும், திருச்சியில் குடிநீர் விநியோக திட்டமும் நிறைவேற்றிவருகிறது. Shriram EPC Limited 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள Shriram குழும நிறுவனமாகும்.
இந்த பணிகளுக்கான டெண்டர், இ-டெண்டர் முறையில் வெளியிடப்பட்டு, ஆவணங்களை ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 3 வரை - இலவசமாக
பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பதற்கு முன்னர் விளக்க கூட்டம் (Pre-Bid Meeting) ஆகஸ்ட் 23
அன்று காலை 11 மணி அளவில், காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்றது.
இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ்
அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம்
நகராட்சியும் பங்களிக்கும். அதன்படி காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும். திட்டம் துவக்கப்பட்டு 18 மாதங்களில்
(மழை காலங்களையும் சேர்த்து) நிறைவு செய்யப்படவேண்டும்.
இந்த திட்டம் குறித்த ஆவணமான - Detailed Project Report (DPR)ட்டினை - தகவல் பெறும் உரிமை சட்டம் (RIGHT TO INFORMATION ACT) கீழ், காயல்பட்டணம்.காம் பெற்றுள்ளது. விரைவில் அது இணையதளத்தில் வெளியிடப்படும். |