ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் மாவட்டம் முழுக்க நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று, மாவட்ட ஆட்சியருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
வெள்ளி விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள், இம்மாதம் 19, 20, 21 தேதிகளில் தூத்துக்குடியிலுள்ள வ.வு.சி.கல்லூரி மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.
19.10.2012 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
அன்று காலை 07.00 மணியவில், ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் பங்கேற்ற பசுமை ஓட்டம் (Greenaathan) தூத்துக்குடி நகரின் 5 முக்கிய சாலைகளின் வழியாக தருவை மைதானத்தை வந்தடைந்தது.
அன்று மாலை 06.00 மணிக்கு உணவுத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் - உணவுத் திருவிழாவைத் துவக்கி வைத்து, பசுமை ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, விழா பேருரையாற்றினார்.
இரவு 08.00 மணியவில், திரைப்பட பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் குழுவினரின் இன்னிசை மற்றும் நடனக் கச்சேரி நடைபெற்றது.
20.10.2012 சனிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேனிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அன்று காலை 11.00 மணியளவில் நெல்லை கண்ணன் தலைமையில் அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. மாலை 04.00 மணிக்கு செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. மாலை 06.00 மணிக்கு, தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செல்லப் பிராணிகள் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தின் மக்கள் நலத்திட்டப் பணிகள் புகைப்பட கண்காட்சி ஆகியனவற்றை தமிழக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்து, விழா பேருரையாற்றிதுடன், போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளும் வழங்கினார்.
21.10.2012 அன்று காலை 11.00 மணிக்கு, அறிஞர்கள் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலை 06.00 மணிக்கு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் - அரசு அலுவலர்கள் - பொதுமக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேரணியைத் துவக்கி வைத்து நினைவுப் பரிசுகள் வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன், கைவினைப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர், விழா நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தலைமையேற்ற தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையுரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் “சிங்கம் 2” படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த இயக்குநர் ஹரி, நடிகர் சூர்யா ஆகியோர் நிறைவுநாள் விழாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினர்.
நடிகர் சூர்யா - தன் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் அகரம் நிறுவம் சார்பாக மாணவ-மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
பின்னர், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோருக்கு விழாக்குழுவின் சார்பில் விழா தலைவரும், மாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் ஆட்சியரும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
நடிகர் சூர்யா விழா அரங்கையடைந்தபோது, பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அந்நேரத்தில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையுரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். நடிகர் சூர்யா வந்ததையடுத்து பார்வையாளர்களின் பெரும் இரைச்சல் காரணமாக அமைச்சரின் உரை அவர்களின் காதுகளில் விழாமலேயே நிறைவுற்றது.
விழாவின்போது, தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா நிகழ்ச்சிகளையொட்டி வெளியிடப்பட்டிருந்த வெள்ளிவிழா பாடலுக்கு அனிமேஷன் வடிவமைக்கப்பட்ட குறுந்தகடு, விழா மலர். தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுக் குறிப்பேடு ஆகியன வெளியிடப்பட்டன.
விழா தலைவர் சி.த.செல்லப்பாண்டியன் அவற்றை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அதனைப் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வெள்ளிவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கேக் வெட்டப்பட்டது. விழா தலைவர் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட ஆட்சியர் விழா தலைவருக்கும் வாயில் கேக் ஊட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னின்று பொறுப்பேற்று செய்த தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு, இவ்விழாவின்போது மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார்.
பின்னர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரது வருகைக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.
வெள்ளிவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியின்போது குறுந்தகடாக வெளியிடப்பட்ட வெள்ளிவிழா பாடல் அனிமேஷனைப் பார்க்க இங்கே சொடுக்குக!
வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட இப்பாடல், காயல்.டிவி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனைக் காண இங்கே சொடுக்குக!
விழாவின் நிறைவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களைக் காண இங்கே சொடுக்குக! |