ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் நேற்று முதல் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்விடங்கள் அனைத்திலும் மாடு உள்ஹிய்யா கொடுக்கப்படுகிறது. கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் மட்டும் ஒரு ஒட்டகம் இன்று உள்ஹிய்யா கொடுக்கப்படுகிறது.
கிடாயைப் பொருத்த வரை, அவரவர் தம் இல்லங்களிலேயே உள்ஹிய்யா கொடுத்து, அதன் இறைச்சியை தமக்கும் - உறவினர்கள் - நண்பர்கள் - ஏழைகளுக்கும் வழங்கி வருகின்றனர்.
நகரில் உள்ஹிய்யா நிறைவேற்றக் காட்சிகளில் சில பின்வருமாறு:-
துவக்கமாக பிராணி முறைப்படி அறுக்கப்படும். பின்னர் அது உறிக்கப்பட்டு இறைச்சி தனியாக பிரித்தெடுக்கப்படும். அதன் பிறகு, பிரித்தெடுக்கப்பட்ட இறைச்சி பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் 8 பங்குகளாகப் பிரிக்கப்படும். (உள்ஹிய்யா பங்குதாரர்களுக்கு 7 பங்குகள் தவிர, உள்ஹிய்யா கொடுக்குமிடத்தில் இறைச்சி கேட்டு வந்து நிற்கும் ஏழை-எளியோருக்காக ஏழைப் பங்கு ஒன்று என மொத்தம் 8 பங்குகள்.)
பங்குகளாகப் பிரிக்கப்பட்ட இறைச்சி தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு, அதன் மீது பங்குதாரர் குறித்த விபரங்கள் ஒட்டப்பட்டு, வரிசையாக வைக்கப்படும். அந்தந்த பங்குதாரர்கள் அவரவர் பங்குகளை சிரமமின்றி எடுத்துச் செல்வர்.
இந்த உள்ஹிய்யா ஏற்பாட்டுப் பணிகளில் களத்திலிருக்கும் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் அதிகாலை 04.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை ஏற்பாட்டுப் பணிகளை மும்முரமாகக் கவனிப்பர். அவர்களுக்கு அவ்வப்போது தேனீர், காலை உணவு என அனைத்தும் அவ்விடத்திலேயே பரிமாறப்படும். |