காயல்பட்டினத்தில் 27.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
பெருநாள் தொழுகையையடுத்து, காயலர்கள் தம் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆண் - பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நண்பர்களுடன் தெருப்பகுதிகளில் ஒன்றுகூடி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
ஹஜ் பெருநானை முன்னிட்டு, நேற்று மாலை 04.30 மணி முதல் கடற்கரையில் காயலர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரண்டனர். பொதுமக்கள் வருகையைக் கருத்திற்கொண்டு பல்வேறு நடைபாதைக் கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது.
ராட்சத பலூன்:
கடந்த நோன்புப் பெருநாளைப் போல நடப்பு ஹஜ் பெருநாளின்போதும் எவ்வித முன்னனுமதியும் பெறப்படாத நிலையில் கடற்கரையில் ராட்சத பலூன் நிறுவப்பட்டுள்ளது.
(இப்படங்கள் கடந்த நோன்புப் பெருநாளின்போது பதிவுசெய்யப்பட்டவை.)
ஜெனரேட்டர் துணையுடன் இயக்கப்படும் இந்த பலூனில் ஏராளமான குழந்தைகள் கட்டணம் செலுத்தி ஏறி விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஒரு குழந்தைக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மாலை 06.30 மணியளவில் திடீரென ஜெனரேட்டர் இயக்கம் நின்று போனதால், பலூனில் அடைக்கப்பட்டிருந்த காற்று முற்றிலுமாக வெளியேறியது. அதனைத் தொடர்ந்து, அதில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
சூதாட்டக் கடை:
அதுபோல, கடற்கரையின் ஒரு பகுதியில் சூதாட்டக் கடை அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பொருட்கள் விரிப்பில் கிடத்தப்பட்டிருக்கும். கட்டணம் செலுத்திய பின்னர், வாடிக்கையாளர் கையில் ஒரு சில வளையங்கள் கொடுக்கப்படும். அவற்றை அவர்கள் பரத்தப்பட்டிருக்கும் பொருட்களின் மீது வீச வேண்டும். சரியாக பொருளின் மீது விழுந்தால் அப்பொருள் அவருக்குச் சொந்தம். விழவில்லையெனில், வாடிக்கையாளருக்கு எந்தப் பொருளும் கிடைக்காது. ஆனால் கடை உரிமையாளருக்கு கட்டணக் காசு சொந்தமாகிவிடும். இதுவே இக்கடையின் வாடிக்கையாளர் விதிமுறை.
இக்கடையைக் கண்ணுற்ற சிலர் கடை உரிமையாளரிடம் கடையை அகற்றுமாறு வலியுறுத்தினர். எனினும் அதனால் எந்தப் பலனும் விளையவில்லை.
கடந்த காலங்களில் இதுபோன்ற கடைகள், மக்கள் திரண்டிருக்கும்போது கடற்கரைக்கு கொண்டு வரப்படும் யானை - குதிரை உள்ளிட்ட விலங்குகள், மீனவர்கள் நடத்தும் பாதுகாப்பற்ற படகு சவாரி உள்ளிட்டவற்றை அன்றைய பெரியவர்கள் வலிமையுடன் தடுத்து அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டினம் கடற்கரையில் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி - நினைத்த நேரத்தில் கடைகளை அமைக்கப்படும் வழமை உள்ள நிலையில், இதற்காக நகர்மன்றக் கூட்டத்தில் முறையான வரையறைகளை தீர்மானமாக்கி, நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அவற்றை செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்பது நேற்று கடற்கரைக்கு வந்த சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. |