காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் கல்விக்குழு ஏற்பாட்டில் “இவரை போல் நீங்களும் சாதிக்கலாமே...?” என்ற தலைப்பில், மாணவர் ஊக்குவிப்புக் கருத்தரங்க நிகழ்ச்சி, இம்மாதம் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி - ஹாஜி எஸ்.ஏ.சுலைமான் ப்ளாக் கேளரங்கில் நடைபெற்றது.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் - கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த எம்.முஹம்மத் இப்றாஹீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிகளை, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ். நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அமைப்பின் கல்விக்குழு தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மஸ்னவீ நிகழ்வுக்குத் தலைமையேற்று, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, அமைப்பின் கல்விக்குழு உறுப்பினர் வழக்குறைஞர் அஹ்மத் - சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார். அறிமுகவுரையிலிருந்து சில குறிப்புகள்:-
<> சிறப்பு விருந்தினர் எம்.முஹம்மத் இப்றாஹீம், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்...
<> 1992ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு (SSLC) அரசு பொதுத் தேர்வில் நகரளவில் முதலிடம் பெற்றவர்...
<> பொறியியல் (B.E.) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்... [Sathak Engineering College]
<> பொறியியல் முதுகலை (M.E.) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்... (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY [NIT] - TRICHY)
<> 20க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை (Patent right) பெற்றுள்ளார்...
<> இவர் எழுதிய ஒரு பாகம் (Chapter) பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ளது...
<> ஆறு தேசிய / சர்வதேச ஆராய்ச்சிப் புத்தகங்களில் இவரின் தயாரிப்புகள் வெளியாகியுள்ளன...
<> பல கல்லூரிகளில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டுள்ளார்...
<> கண்டுபிடிப்புகளுக்கும், சிறந்த பணிக்கும் பல விருதுகளை பெற்றுள்ளார்...
<> Bharat Electronics Limited என்ற இந்திய அரசாங்க நிறுவனத்தில் ஓர் ஆண்டு பணிபுரிந்த பின், 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிறுவனமான Honeywell நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்...
<> Research Manager – ஆக தற்போது பணிப்புரியும் இவர், Ph.D பட்டம் பெற்ற பல விஞ்ஞானிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்...
இவ்வாறு சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர், சிறப்பு விருந்தினர் எம்.முஹம்மத் இப்றாஹீம் உரையாற்றினார். துவக்கமாக தன் குடும்ப உறுப்பினர்கள், முகவரி, படித்த பள்ளி ஆகியன குறித்து அறிமுகம் செய்து பேசிய அவர், பள்ளிப் பருவத்தில் சிறிது அலட்சியமாக இருந்த தனக்கு, பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்தில் பிறந்தவனாக தானிருந்த நிலையிலும் உயர்கல்விப் பருவத்தில் தனக்கு ஊக்கமளித்து, தேவையான நிதியுதவிகளை சமூக நல அமைப்புகளின் மூலம் பெற்றுத் தந்து, இன்று இந்தளவுக்கு தான் சிறந்தோங்க ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் காரணம் என்று கூறினார்.
பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளமை குறித்து விளக்கிய அவர், விமானி ஒருவர் தான் ஓட்டும் விமானம் தரையிறங்குகையில், சரியான முறையில் ஓடுதளத்திலுள்ள மஞ்சள் கோட்டில் அதன் முன்சக்கரம் செல்கிறதா என்பதை, விமானத்திலிருந்தவாறே தெரிந்துகொள்வதற்கான முறையை தான் கண்டறிந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசி, அதற்காக காப்புரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கண்டுபிடிப்புகள் புதிதாகத்தான் மூளையில் தோன்ற வேண்டுமென்பதில்லை என்றும், பள்ளிப் படிப்பின்போது கற்கும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் தனது கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளதாகவும் என்றும் தெரிவித்தார்.
தான் கற்ற காலத்தில் - பொருளாதார நலிவுற்றிருந்தபோது, கல்விக்காக உதவும் அமைப்புகள் நகரில் மிகக் குறைவாகவே இருந்ததாகவும், இன்று அதற்கு பல நகர்நல அமைப்புகள் ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், KCGC, இக்ராஃ உள்ளிட்ட அமைப்புகள் மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டுவதிலும் மும்முரமாக செயல்பட்டு வரும் இக்காலத்தில் காயல்பட்டினம் மாணவ-மாணவியர் சாதிப்பதென்பது ஒன்றும் எட்டாக்கனியல்ல என்று தெரிவித்தார்.
பின்னர், மாணவ-மாணவியரும், பார்வையாளர்களும் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்துப் பேசினார்.
இன்றுள்ள மாணவர்களுக்கு சாதனையாளராகக் காட்சியளிக்கும் இவர், இதுபோன்ற பல சாதனையாளர்களை உருவாக்க செயல்திட்டங்கள் வகுத்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் KCGC, இக்ராஃ போன்ற அமைப்புகளுக்கு எந்த வகையில் துணை நிற்பார் என்று பார்வையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு விடையளித்த சிறப்பு விருந்தினர், எந்தெந்த வகையில் தனது துணை எதிர்பார்க்கப்படுகிறதோ அவையனைத்திலும் இறையருளால் துணை நிற்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
பின்னர், KCGC அமைப்பின் சார்பில், அதன் கல்விக்குழு உறுப்பினரும் - நிகழ்ச்சித் தலைவருமான ஹாஜி எம்.எம்.மஸ்னவீ - சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு பெரிய தகுதிகளுடன் இருக்கையில் அவர் யார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று கருதிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சிறப்பு விருந்தினர் எம்.முஹம்மத் இப்றாஹீம் உடைய குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினர்.
அப்போது கருத்து தெரிவித்த சிறப்பு விருந்தினரின் மாமனார் - முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த கிழுறு முஹம்மத், தன் மகளைத் திருமணம் செய்த நாள் முதல் இன்று வரை இவர் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளார் என்பது மட்டுமே தனக்குத் தெரியுமென்றும், இப்படிப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் இவர் சொந்தக்காரர் என்பது இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின்போதே தனக்குத் தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியின் துவக்கத்தின்போது மாணவ-மாணவியருக்கு அடையாளச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அவற்றிலிருந்து 3 பேரை சிறப்பு விருந்தினர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க, அவர்களுக்கான பரிசுகளை KCGC அமைப்பின் கல்விக்குழு உறுப்பினர் சாளை பஷீர் ஆரிஃப், அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் ஆகியோர் வழங்கினர்.
பின்னர், துளிர் அறக்கட்டளையின் சார்பிலும், அதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகர அரிமா சங்கம் சார்பிலும் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
நிறைவாக, KCGC அமைப்பின் உறுப்பினர் பி.ஏ.புகாரீ நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கோரி, காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 09 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர் அவரவர் பள்ளிகள் மூலம் அழைக்கப்பட்டிருந்தனர். அதனடிப்படையில், மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், இக்ராஃ மற்றும் KCGC அமைப்பின் அங்கத்தினர் செய்திருந்தனர்.
|