ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் 27.10.2012 முதல் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் ஜாவியாவில் கூட்டு முறை உள்ஹிய்யா திட்டத்தின்கீழ், இவ்வாண்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பதிவு செய்தவர்களின் பங்குகள் பற்றிய விபரங்கள், நேற்று ஜாவியாவின் www.kayalpatnamzaviya.com என்ற இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருவதாகவும், பங்குதாரர்கள் தம் பங்கு நிறைவேற்றப்பட்டு விட்டதற்கான விபரங்களை அதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜாவியா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவியாவில் நேற்று முதல் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு வருகிறது. துவக்கமாக பிராணி முறைப்படி அறுக்கப்படுகிறது. பின்னர் அது உறிக்கப்பட்டு இறைச்சி தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட இறைச்சி - பங்குதாரர்களின் ஒப்புதலுடன் 8 பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. (உள்ஹிய்யா பங்குதாரர்களுக்கு 7 பங்குகள் தவிர, உள்ஹிய்யா கொடுக்குமிடத்தில் இறைச்சி கேட்டு வந்து நிற்கும் ஏழை-எளியோருக்காக ஏழைப் பங்கு ஒன்று என மொத்தம் 8 பங்குகள்.)
பங்கு இறைச்சிகள் தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு, அதன் மீது பங்குதாரர் குறித்த விபரங்கள் ஒட்டப்பட்டு, தெருவாரியாக வரிசையாக வைக்கப்படுகிறது. பின்னர், ஆட்டோ, ஆம்னி வேன் வாகனங்கள் மூலம் ஜாவியாவின் உள்ஹிய்யா ஏற்பாட்டுக் குழு சார்பில் பங்குதாரர்களின் இல்லங்களில் டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
இந்த உள்ஹிய்யா ஏற்பாட்டுப் பணிகளில் களத்திலிருக்கும் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் அதிகாலை 04.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை ஏற்பாட்டுப் பணிகளை மும்முரமாகக் கவனிக்கின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது தேனீர், காலை உணவு என அனைத்தும் அவ்விடத்திலேயே பரிமாறப்படுகிறது.
தகவல்:
A.W.அப்துல் காதிர் ஆலிம் புகாரீ
மற்றும்
மவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல் ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ
|