தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலை கடலில் திறந்துவிட்டுள்ள கழிவு நீரினால் கடல் செந்நிறமாக மாறியுள்ளது குறித்து புகார் மனு ஒன்று KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA) சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் அக்டோபர் 29 வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியகத்தில் பிரதி திங்கள் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அக்டோபர் 29 நடந்த கூட்டத்தில் KEPA அமைப்பின் துணைத் தலைவர் T.A.S. அபூபக்கர் தலைமையில் திரளானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அவ்வேளையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவின் சாராம்சம் பின் வருமாறு:
DCW தொழிற்சாலை காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் வடக்கு பகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக அத்தொழிற்சாலையின் சுற்றுப்புற சூழல் குறித்த விதிமீறல் காரணமாக இப்பகுதி மக்கள் கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான காயல்பட்டின மக்கள் கையெழுத்திட்ட மனு சமீபத்தில் - தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியகத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை மற்றும் தூத்துக்குடி அலுவலகங்களில் சமர்பிக்கப்பட்டது. இருப்பினும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் - DCW தொழிற்சாலை கடலில் கழிவு நீரினை திறந்து விடுகிறது. இதுகுறித்த பல ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் உள்ளன. இவ்வாண்டு - வடக்கிழக்கு பருவமழை அக்டோபர் 20 அன்று துவங்கியது. மழை துவங்கிய ஒரு சில தினங்களிலேயே - DCW தொழிற்சாலை கடலுக்குள் கழிவு நீரை திறந்து விட்டுள்ளது. அதனால் - காயல்பட்டினத்தை ஒட்டிய கடல் - செந்நிறமாக தற்போது மாறியுள்ளது. இதனால் மீன் வளமும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு விளக்கம் கூறும் DCW நிறுவனத்தின் பதில் விஞ்ஞான பூர்வமான பதிலாக இல்லை. செயற்கைக்கோள் புகைப்படம் மிகவும் தெளிவாக இந்த கழிவு நீர் DCW தொழிற்சாலை வளாகத்தில் இருந்து தான் வருகிறது என்று காண்பிக்கிறது.
ஆகவே - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக சிறப்பு குழு அமைத்து, DCW தொழிற்சாலையினை இந்த மழைக்காலம் முடியும் வரை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மேலும் - காயல்பட்டினம் நகராட்சி, DCW நிறுவனத்தின் கழிவு நீர், கடலினை அடையாதவாறு, தடுப்புசுவர் கட்டவேண்டும்.
DCW நிறுவனத்தினால் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்று நோய் உட்பட பல நோய்கள் இப்பகுதியில் பெருகுவதற்கு இத்தொழிற்சாலை காரணமாக இருக்கலாம் என மக்கள் ஐயப்படுகின்றனர்.
ஆகவே - மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர், இவ்விசயத்தில் உடனடி கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்ப்படி கேட்டுகொள்கிறோம்.
இச்சந்திப்பின்போது KEPA அமைப்பின் நிர்வாகம், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் N.S.E.மஹ்மூத், சாளை பஷீர், M.W. ஹாமீத் ரிபாய், M.M. முஜாஹித் அலி, S.A. நூஹு, A. தர்வேஷ் முஹம்மது, முஹம்மது மொஹிதீன், M.S. ஸாலிஹ், இப்ராஹீம், சாளை இல்யாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்:
KEPA
|