நடப்பாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் - 27.10.2012 சனிக்கிழமை மாலையில் தின்பண்டக் கடைகள், ராட்சத பலூன் உட்பட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நகராட்சியின் முன்னனுமதி எதுவும் பெறப்படாமல் அக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
அன்று இரவு 08.00 மணியளவில் ராட்சத பலூனுக்காக இயக்கப்பட்ட ஜெனரேட்டர் திடீரேன நிறுத்தப்பட்டது. அந்நேரத்தில் நகரில் மின் வினியோகமும் தடைபட்டிருந்ததால், ராட்சத பலூனைச் சுற்றி நின்ற ஆண்களும், பெண்களும் இருட்டில் தள்ளுமுள்ளுகளைச் சந்தித்தனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து, அவ்விடம் வந்த நகராட்சி அதிகாரிகள், அன்றுடன் கடையை அகற்றிடுமாறு அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
எனினும், முன்னனுமதி பெறாத அக்கடைகள் மறுநாள் - 28.10.2012 அன்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து - பொருட்களின் மீது வளையத்தை வீசி விளையாடும் சூதாட்டக் கடையை ஆண் - பெண் வேறுபாடின்றி பொதுமக்கள் மொய்க்கத் துவங்கினர்.
அதனையடுத்து அவ்விடம் வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், காயல்பட்டினத்தின் கலாச்சாரத்திற்கு எதிரான - பொதுமக்களுக்கு எந்தப் பயனையும் தராத அவ்விளையாட்டை உடனடியாக நிறுத்தி, கடையை அகற்றுமாறு வலியுறுத்திக் கூறினர். அதனையடுத்து, சில மணித்துளிகளில் அக்கடை மூடப்பட்டது.
கடற்கரையில் முன்னனுமதி பெறாமல் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டிருந்ததைக் கேள்வியுற்று, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி சுகாதார ஆணையர் அஷோக் குமார், காயல்பட்டினம் நகர்மன்ற 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி ஆகியோர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர்.
அங்கு, தின்பண்டக் கடைக்காரர்களிடம் பேசிய நகர்மன்றத் தலைவர், பிழைப்புக்காக இதுபோன்ற வணிகங்களைச் செய்வதில் தவறில்லை என்றும், அதே நேரத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து பொருட்களை விற்றால், கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும் என்றும் தெரிவித்தார்.
கடற்கரையில் சிறுவணிகர்களுக்காக பாதுகாப்பான கடைகள் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும், அதுவரை கடற்கரை மணற்பரப்பை அசுத்தப்படுத்தாமல் - நகராட்சியின் முன்னனுமதி பெற்று பொருட்களை விற்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பின்னர், ராட்சத பலூன் உரிமையாளரிடம் பேசிய அவர், கடந்த நோன்புப் பெருநாளின்போதே - முன்னனுமதி பெறாமல் ராட்சத பலூன் நிறுவியதற்காக நகராட்சி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் முன்னனுமதி பெறாமல் அமைத்தது தவறு என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் பொதுமக்கள் - குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாதிருக்கும் பொருட்டு, அதனை உடனடியாக அகற்றிடுமாறும் கூறினார்.
அதுபோல, எடை நிர்ணயம் எதுவுமின்றி - பலவீனமான ராட்டினத்தில் சிறுவர் - பெரியோர் என அனைவரையும் ஏற்றி கட்டணம் வசூலித்துக்கொண்டிருந்ததையும், சுற்றி வேலி எதுவும் அமைக்காமல் நிறுவப்பட்டிருந்த குழந்தைகளுக்கான ராட்டினத்தையும் அவர் கடுமையாகக் கண்டித்துச் சென்றார்.
இந்நிலையில், 29.10.2012 திங்கட்கிழமையன்றும் (நேற்று) ராட்சத பலூன் - ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அகற்றப்படாததைக் கண்ணுற்ற பொதுநல ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதனையடுத்து, நகர்மன்றத் தலைவர் உத்தரவின்பேரில் உடனடியாக அவ்விடம் விரைந்து வந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் எஸ்.பொன்வேல் ராஜ், உடனடியாக அக்கடைகளை அகற்றுமாறு கூறி, கடைகள் அகற்றப்பட்ட பின்னரே அவ்விடத்தை விட்டும் திரும்பிச் சென்றார்.
[செய்தியில் கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 11:42 / 01.11.2012] |