ஐக்கிய அரபு அமீரகத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமீரக காயலர்கள் பெருநாள் இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, சுற்றுலா ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரகத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளுக்கு அடுத்தடுத்த நாட்களில் அமீரக காயலர்கள் சிற்றுலா செல்வது வழமை.
அந்த அடிப்படையில், ஐக்கிய அரபு தேசத்தின் பல்வேறு அமீரகங்களில் வாழும் காயலர்கள் இந்த புனித ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறையை தங்கள் சக காயலர்களுடன் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்காக பெருநாளைக்கு மறுநாள் சனிக்கிழமை 27/10/12 அன்று ஒருநாள் இன்ப சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து துபாய் மற்றும் அபு தாபி நகரில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல்-அய்ன் என்ற சுற்றுலா நகருக்கு சென்று வர தீர்மானித்து அதற்க்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை துணி உமர் ஹாஜி மற்றும் விளக்கு தாவூத் ஹாஜி அவர்களின் தலைமையிலும் சாளை ஷேக் ஸலீம் மற்றும் யஹ்யா முஹியதீன் ஆகியோரின் ஒருங்கினைப்பாலும் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன.
குறித்தபடி சனிக்கிழமை 27/10/12 அன்று காலை 8 மணிக்கே ETA அஸ்கான் D பிளாக் அருகில் காயலர்கள் குடும்ப சகிதம் கூடத்தொடங்கி விட்டனர். எதிர்பார்த்திருந்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகம் குடும்பங்கள் வந்ததால் பெண்கள் மற்றும் சிறார்கள் பஸ்சிலும் ஆண்கள் சிலரது கார்களிலும் பயணிக்கும் படி பணிக்கப்பட்டார்கள். ஆக மொத்தம் 120 பெரியோர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிறார்களுடன் இன்ப சுற்றுலா ஊர்திகள் அல் அயின் நகரை நோக்கி பயணித்தன. இதெற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தின் முன் கண்ணாடியில் "நெல்லை பாண்டியன் எக்ஸ்பிரஸ்" என்று எழுதப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையில் மதிய உணவான நெய்ச்சோறு கலரிக்கறி கத்திரிக்காய் மாங்காய் மற்றும் இனிப்பு உட்பட இரவு சாப்பாடான காய்கறி சேமியா எல்லாவற்றையும் ஜனாப் விளக் தாவூத் ஹாஜி அவர்களின் சொந்த பணிமனையில் வைத்து தயாராகிக்கொண்டிருந்தது.
இடை வழியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு காலை சிற்றுண்டியான பூரி கிழங்கு, சிறுவர்களுக்கு இட்லி வடை மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
பின்னர் அல்அய்ன் நகரைச் சென்றடைந்து சிறிய மஷூரா செய்து அங்குள்ள தேசிய தொல்பொருட்காட்சி பூங்காவிற்கு சென்றடைந்தனர். அங்கு தொழுகையை முடித்துவிட்டு மக்கள் கேளிக்கை மற்றும் விளையாட்டில் ஈடுபட்டனர். அன்று தட்பவெப்பமும் மிதமானதாக இருந்ததால் மக்களின் மனதில் குதூகலம் தாண்டவமாடியது.
மணமணக்கும் மதிய சாப்பாடு நமதூர் முறையிலேயே பரிமாறப்பட்டு கொஞ்சம் இளைப்பாறிய பின்பு எல்லோரும் அல்அய்ன் மிருகக் காட்சி சாலைக்கு பயணமாகினார்கள். அங்கே பறவைகள் சாகச செயல்கள், அரிய விலங்குகள் மற்றும் அரபு கலாசார நடனங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றை மக்கள் எல்லோரும் மனதார ரசித்தனர்.
பின்னர் இரவுச் சாப்பாடு வண்டியிலேயே வழங்கப்பட்டது இரவு 1030 மணிக்கு அல்லாஹ் உதவியால் எல்லோரும் சிறப்பாக வந்தடைந்தார்கள்.
இந்த இன்பச் சுற்றுலாவில் கலந்துகொண்ட அவைவரும் ஏற்பாட்டாளர்களுக்கும், வாகன உதவி தந்த ETA குழும அதிகாரிகளுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்த வண்ணம் நிறைந்த மனதோடு விடைபெற்றனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சாளை ஷேக் ஸலீம் |