ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் 27.10.2012 முதல் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் மாடுகளும், ஒரு ஒட்டகமும் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டுள்ளது. 28.10.2012 திங்கட்கிழமையன்று காலை 11.00 மணியளவில் ஒட்டகம் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டது. அதனைப் பார்ப்பதற்கென நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
உள்ஹிய்யா ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். |