காயல்பட்டினம் சுலைமான் நகர் என்றழைக்கப்படும் மாட்டுக்குளம் பகுதியில் குடிசைகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், அதனையொட்டி தெற்கேயமைந்துள்ள சல்லித்திரடு பகுதிகளில், குடியிருப்புகளைச் சுற்றியும் மழைநீர் பல நாட்களாக தேங்கி, கொசுக்கள் பெருகக் காரணமாகி வருகிறது.
இப்பகுதிகளிலுள்ள மழைநீரை கடலுக்கு வெட்டி விடுவதற்காக காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் பள்ளம் தோண்டுவது குறித்து ஆய்வுசெய்தபோது, தனது நிலத்தின் வழியே பள்ளம் தோண்டக்கூடாது என தனியார் நில உடையாளர் ஒருவர் தெரிவித்ததாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அப்பணி துவக்கப்படாமலேயே விடப்பட்டது.
இந்நிலையில், தமது குடிசை வீடுகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் காரணமாக தங்களால் குடியிருக்க முடியாத நிலையை விளக்கி, உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரிடம் கோரினர். அதனையடுத்து, 28.10.2012 அன்று மாலை 05.30 மணியளவில் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார் ஆகியோர் அங்குள்ள சுற்றுப்புறப் பகுதிகளைப் பார்வையிட்டனர்.
பின்னர் பொதுமக்களைச் சந்தித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கும் மழைநீர் மொத்தமாக வந்து சேரும் குளத்துப் பகுதியில் வீடு கட்டியதாலேயே இப்பிரச்சினை நிலவுவதாகத் தெரிவித்தார்.
அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் பள்ளத்திலிருப்பதால் அதனை வெட்டி விடுவது சாத்தியமற்றது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார். எனினும், வீடுகளிலும், வீடுகளைச் சுற்றியும் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வேறிடத்திற்கு அப்புறப்படுத்த ஆவன செய்யப்படும் என்று அவர்கள் கூறிச் சென்றனர். |