நாளை (அக்டோபர் 30) உலக சிக்கன தினம் (World Thrift Day) அனுஷ்டிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பொது மக்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும்.
“சிறுக கட்டி பெருக வாழ்” என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும்.
சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது. எனவே, பொது மக்கள் அனைவரும் தமிழக அரசின் சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.
“இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு” என்பதால் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கை வளம் பெற அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்க வேண்டும் என இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா,
தமிழக முதலமைச்சர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை - 9. |