காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவில் அமைந்துள்ளது மஹான் அஸ்ஸெய்ய்த் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம். ஆண்டுதோறும் முஹர்ரம் முதல் நாள் முதல் 14ஆம் நாள் வரை இம்மஹான் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அன்னாரின் 141ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 16.11.2012 அன்று துவங்கி, 28.11.2012 அன்று நிறைவுற்றது. அந்நாட்களில் தினமும் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் முஹர்ரம் 13, 14ஆம் நாட்களில் நடைபெற்றது. முஹர்ரம் 13ஆம் நாளான 27.11.2012 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு இமாம் ஹஸன் - ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா மீதான மவ்லித் மஜ்லிஸ், டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் பேஷ் இமாம் தலைமையில் நடைபெற்றது. அன்றிரவு 07.00 மணிக்கு, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இமாம் ஹஸன் - ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முஹர்ரம் 14ஆம் நாளான 28.11.2012 புதன்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்கள் மீதான மவ்லித் மஜ்லிஸ், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ தலைமையில் நடைபெற்றது. அன்றிரவு 07.00 மணிக்கு ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எல்.எஸ்.முஹம்மத் ஹஸன் இர்ஃபான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் ஆகியோர் மஹான்களின் புகழ் கூறும் பாடல்களைப் பாடினர்.
அதனைத் தொடர்ந்து, மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்க உரையை, ‘அல்-அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ நிகழ்த்தினார்.
ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் நன்றி கூற, காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் ஷெய்கு அலி மவ்லானா ஸாஹிப் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் கந்தூரி கமிட்டியினர் செய்திருந்தனர்.
தகவல்:
ஸல்மான் ஃபாரிஸ் |