ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், அடைமழைக்கிடையிலும் ஆரவாரத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லா வருடமும் போல இவ்வருடமும் துபை காயல் நல மன்ற பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் ஒரு மாநாட்டு ஏற்பாடுகள் போல் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே தொடங்கின. ஒவ்வொரு துறைக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அவரவருக்கு பணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடாத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட பணிகளின் நிலைமைகள் மற்றும் பணிகளை மேம்படுத்தும் கருத்து பரிமாற்றங்கள் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமீரகமே எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை - ஆனால் எல்லோர் மனமும் அன்று நிலவி இருந்த மிகவும் மனோரஞ்சிதமான பருவ நிலையை அனுபவித்து சந்தோஷப்பட்டாலும், துபை / ஷார்ஜா வில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பலமான மழை அன்று பெய்ததால் எல்லோர் மனதிலும் நடக்கவேண்டிய பொதுக்குழு கேள்விக்குறியாக மாறியது. ஒருங்கிணைப்பாளர்களின் அலைபேசிகள் அலறிக்கொண்டே இருந்தன. இறுதியாக ஆலோசனைகளுக்குப்பிறகு ஆண்கள் தேரா வில் அமைந்துள்ள அஸ்கான் 'D ' பிளாக்கில் கூடுவது என்றும் பெண்கள் மற்றும் குழைந்தைகள் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் புஹாரி அவர்கள் வில்லாவில் கூடுவதாகவும் முடிவு எடுத்து அந்த முடிவுகள் எல்லா காயலர்களுக்கும் SMS மூலம் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கே வைத்துதான் கூட்டத்திற்காக "காயல் அகணி பிரியாணி" தயார் ஆகிக்கொண்டிருந்ததால், கூட்டத்தின் தன்னார்வ தொண்டர்கள் இத்திசாலாத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் ஹுசைன் ஈசா அவர்களின் ஒருங்கிணைப்பில் எல்லா விதமான மாற்று எற்பாடுகளும் துரித கதியில் நடைபெற்றன. விடாத அடை மழைக்கிடையிலும் யாரும் தவறுதலாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்ட இடமான அல் ஸஃப்ஆ பூங்காவிற்கு வந்தால் அவர்களை சரியான இடத்திற்கு வழி காட்டவும் பூங்கா வாயிலில் இருவர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சரியான தகவல் பரிமாற்றத்தால் காயலர்கள் குறிப்பிட்ட இடத்தில் திரளாக ஓன்று கூடியிருந்தனர். தத்தம் குடும்பங்களை மட்டும் வில்லாவில் விட்டு வந்த குறையே தெரியாமல் ஒருவருக்கொருவர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். ஊரிலிருந்து தங்களின் சொந்தங்களை காண அமீரகம் வந்திருந்த "AT காக்கா" என்று தாயகத்தில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் A T அப்துல்காதர் ஹாஜி, பிரபு மரைக்கார் சாஹிப் ஹாஜி மற்றும் AKS ஷாபி ஹாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அபூதபீ காயல் நல மன்றத்தினருக்கு பொது அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அமீரகத்தின் எல்லா பகுதிகளிலும் இருந்து காயலர்கள் திரளாக கலந்துகொண்டனர். வருகை புரிந்தோருக்கு தேநீர் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது. தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகளை அந்தந்த குழுக்கள் கவனித்துக்கொண்டிருக்க ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் கூட்டம் இனிதே ஆரம்பித்தது.
துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தை மன்றத்தின் தலைவர் J S A புஹாரி தலைமை தாங்கினார்கள். AT அப்துல் காதர் அவர்கள் கிராஅத் ஓத கூட்டம் ஆரம்பமானது. ஆரம்பமாக மன்றத்தின் ஆண்டறிக்கையை மன்றத்தின் செயலாளர் யஹ்யா மொஹியதீன் விரிவாக புள்ளி விபரத்துடன் வாசித்தார்.
பின்பு, மன்றத்தின் தலைவர் J S A புஹாரி சிறப்புரை ஆற்றும் போது மன்றத்தின் செயல்பாடுகள் மென்மேலும் செழித்தோங்க இளைய தலைமுறையினர் தாமாகவே முன்வந்து தங்களின் திறமைகளையும் மேலான ஆலோசனைகளையும் அளிப்பதோடு மன்றத்தின் வேலைகளிலும் தங்களின் பெரும் பங்களிப்பை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். மேலும் கூட்ட நிகழ்வின் இடமாற்றத்தால் ஏற்படும் நிர்வாக மற்றும் செயலாற்றலில் ஏற்ப்படும் குறைகளை பொருத்து கூட்டம் நல்ல முறையில் நடந்தேற எல்லோர் ஒத்துழைப்பையும் கோரினார்கள்.
முக்கியமாக தாயகத்தில் ஒரு அமைப்பை உருவாக்கி, நமதூரிலிருந்து வேலைதேடி வரும் பட்டதாரிகளை நேர்காணல் மூலம் அவர்களின் தகுதி நிர்ணயம் செய்து மன்றத்தினருக்கு பரிந்துரை செய்தால் இங்குள்ள தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முயற்சி மேற்க்கொள்ளப்படும் என்றும் வருங்காலத்தில் ஏனைய காயல் நல மன்றங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தலாம் என்றும் அவர்கள் பரிந்துரை செய்து இந்த முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த ஆவன ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் தங்களது உரையில் மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, ஆண்டறிக்கையில் மன்றத்தால் வழங்கப்பட்ட உதவிகளை கேட்டு வியப்படைவதாகவும், மன்றத்தினரின் ஒற்றுமைக்கும் பிரார்த்தித்தனர். தற்போது நமதூர் எதிர்கொண்டிருக்கும் எப்படிப்பட்ட சவால்களையும் நமது ஒற்றுமையால் தான் எதிர்கொள்ள முடியும் என்றனர். மன்றத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், மூத்த உறுப்பினர் நூஹு சாஹிப் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றத்தின் இலைச்சினை பொதித்த கப் (MUG ) வழங்கி கௌரவித்தனர்.
அபூதபீ காயல் நல மன்றத்தினர் வெளியிட்ட மருத்துவ கையேட்டின் பிரதிகள் வருகைபுரிந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்களின் அறிமுகம் நடைபெற்று உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டு, மணமணக்கும் காயல் அகணி பிரியாணி (வெள்ளை பிரியாணி), சம்பல் மற்றும் பச்சடி பரிமாறப்பட்டது.
மதிய உணவிற்குப்பிறகு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. அஸர் தொழுகைக்குப்பிறகு தேநீர் சமூசா பரிமாறப்பட்டது. மாலையிலும் மழை தொடர்ந்ததால் வேறு எந்த நடவடிக்கைகளும் இல்லாததால், மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர M U முஹம்மத் அலி நன்றி கூற, அவுலியா முஹம்மத் இபுராஹீம் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
பெண்கள் பகுதியில் வேடிக்கை வினோத விளையாட்டுக்கள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. பொதுக்குழு நினைவுப்பரிசாக "கப் (MUG) எல்லா பெண்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதே போலே சிறார்களுக்கு 'கேம் அங்கிள்" என்று எல்லா சிறார்களாலும் செல்லமாக அழைக்கப்படும் மன்றத்தின் துணை தலைவர் சாளை ஸலீம் அவர்கள் அன்பளிப்புகளை வழங்கினார்கள் மழை காரணமாக எந்த விளையாட்டு நிகழ்சிகளும் நடைபெறாததால் சிறார்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தார்கள்.
பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை தலைவர் சாளை ஷேக் ஸலீம் மற்றும் செயலாளர் யஹ்யா முஹியதீன் நெறிப்படுத்தினர்.
மழையினால் பெரும் இடையூறு ஏற்ப்பட்டாலும் ஒருங்கினப்பாலர்களின் சமாயோசித முடிவாலும் துரித நடவடிக்கையாலும் நடந்த நிகழ்வுகள் மன நிறைவாக இருந்தது என்று கூட்ட ஏற்பாட்டாளர்களையும் தன்னார்வ தொண்டர்களையும் வருகை புரிந்த அனைவரும் பாராட்டிய வண்ணம் களைந்து சென்றனர்.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் குறித்து, அதன் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |