DCW தொழிற்சாலையின் அத்துமீறலுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில், இம்மாதம் 10ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - காயலர்களை திரளாக அழைத்துச் சென்று மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து, KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,
“டி.சி.டபிள்யு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள், விரிவாக்கத் திட்டம் குறித்த அச்சங்கள் ஆகியன குறித்து எடுத்துக் கூற, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில் காயலர்கள் பெருந்திரளாகச் சென்று மனு அளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.”
என்று 7ஆவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின் அடிப்படையில், இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 10ஆம் தேதி - திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு, காயலர்களை பெருந்திரளாக அழைத்துச் சென்று கோரிக்கை மனுவை அளிப்பதென, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சென்னையிலுள்ள காயலர்கள் உட்பட - வர வாய்ப்புள்ள அனைத்து காயலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, உரிமைக்காக குரல் கொடுக்க வருமாறு KEPA சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அனைத்து காயலர்களும் - குறிப்பாக சென்னைவாழ் காயலர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளும் பொருட்டு, பின்வருமாறு அறிவிப்பு செய்யப்படுகிறது:-
நாள்: டிசம்பர் 10, 2012 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
இடம்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,
தலைமை அலுவலகம், 76 அண்ணா சாலை, சென்னை.
50 ஆண்டுகளுக்கும் மேலாக DCW தொழிற்சாலை - காயல்பட்டினம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. அதனால் நம் நகர் மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களின் மக்கள் பலர், பல விதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலான செயல்பாடுகளால் உண்டான பாதிப்புகளே அதிகமாக இருக்கும் சூழலில், இந்நிறுவனம் தனது தொழிற்சாலையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை, கடந்த ஆகஸ்ட் மாதம், தொழிற்சாலையின் Ilmenite பிரிவை மூட உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்கள் ஆகியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையம் இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இவற்றைக் கண்டித்தே - சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில், காயலர்கள் திரளாகச் சென்று, மனு கொடுக்க, நவம்பர் 29 அன்று காயல்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆகவே - சென்னையில் வாழும் காயலர்களும், இதர பகுதிகளில் இருக்கும் - வர வாய்ப்புள்ள காயலர்களும் பெருந்திரளாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்திற்கு, மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், நேரடியாக வரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம். வாகன வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை வந்தடைவதற்கான வழித்தட விபரம்:-
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை - வழியாக கிண்டி நோக்கி வரும்போது, கிண்டி பாலத்திற்கு முன்னர், வலதுபுறத்தில் உள்ள ஸ்பிக் அலுவலகம், பெட்ரோல் பங்க் ஆகியவற்றுக்கு அடுத்தாற்போல் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:
பல்லாக் சுலைமான் - 98410 73994
ஜக்கரியா - 98413 91830
புஹாரி - 93852 15717
சபீர் - 94442 34690
ஒருங்கிணைப்பு:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு
KAYALPATTINAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA)
சென்னை வாழ் காயலர்களே, திரளாக கலந்துக்கொள்ளுங்கள்!! திரளாக சென்று மனுவை அளித்தால் தான் அரசின் கவனமும் ஊடகங்களின் கவனமும் நமது பிரச்சனையின் மீது விழும்!
இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |