காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இப்போராட்ட நிகழ்ச்சிகளனைத்திற்கும் ஆதரவளித்தோர், ஒத்துழைத்தோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு KEPA சார்பில், 30.11.2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினத்திலுள்ள நான்கு ஜும்ஆ பள்ளிகளிலும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 03.12.2012 அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை, காயல்பட்டினத்தின் அனைத்து கடைகளுக்கும், ஆட்டோ - வேன் நிறுத்தங்களுக்கும் KEPA துணைத்தலைவர் என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், ஏ.எஸ்.புகாரீ, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் நேரில் சென்று, நோட்டீஸ் வழங்கி - கடையடைப்புக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.
|