காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் DCW தொழிற்சாலை - 50 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இத்தொழிற்சாலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் பொது மக்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இவ்விசயம் குறித்து கடந்த சில மாதங்களாக காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) - ஆர்ப்பாட்டம், மனு வழங்குவது, கையெழுத்து வேட்டை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை, DCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவை மூடிட பரிந்துரைத்திருந்தது. ஆனால் - இது குறித்த முடிவை அரசு இது வரை எடுக்கவில்லை.
பிரச்சனைக்குரிய இந்த இல்மினைட் பிரிவு - 1997 ஆம் ஆண்டு 5 மாதங்களுக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் - 2003 ஆம் ஆண்டு வெளிவந்த Environment, Pollution and Management என்ற புத்தகம் DCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவு குறித்து தகவல் தெரிவிக்கிறது. இப்புத்தகம், புது டில்லியில் உள்ள APH Publishing Corporation என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் அர்விந்த் குமார், சி.பி.போஹ்ரா மற்றும் எல்.கே சிங் ஆகியோர் ஆவர்.
DCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவு மூலம் 1600 க்யூபிக் மீட்டர் (16 லட்ச லிட்டர்) கழிவுகள் கடலில் கொட்டப்படுகிறது என இந்த புத்தகம் தெரிவிக்கிறது.
|