தமிழகம் தழுவிய கால்பந்தாட்டப் போட்டியில், தன் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றும், பள்ளிக்கு ஒரு கேடயமோ, கோப்பையோ வழங்காதது வருத்தத்திற்குரியது என, சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழாவின்போது, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 64ஆவது குடியரசு தின விழாவையொட்டி, தமிழகம் தழுவிய அளவில் - 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சீனியர் பிரிவு கால்பந்தாட்டப் போட்டிகள் தஞ்சாவூரில் நடைபெற்றது.
26.01.2013 மாலை 04.30 மணியளவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளி அணியும், திண்டுக்கல் புனித மேரி மேனிலைப்பள்ளி அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தனர். இதனால் சமனுடைப்பு - டை ப்ரேக்கர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மாநில அளவில் கால்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் வென்று சரித்திர சாதனை புரிந்தமைக்காக, தம் பள்ளியின் சீனியர் பிரிவு கால்பந்து அணி வீரர்களுக்கு, பாராட்டு விழா இன்று காலை 09.15 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ளி) நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளி மாணவர்களின் கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை விபரம் வருமாறு:-
இப்பள்ளியில் நான் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் இந்த 18 ஆண்டுகளில், மிகவும் மகிழத்தக்க பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன... அதுபோல, வருந்தத்தக்க சில நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
மகிழத்தக்க நிகழ்வுகளில், கடந்த சில ஆண்டுகளாக எம் பள்ளியின் கால்பந்து வீரர்கள் ஏராளமான வெற்றிகளைக் குவித்து சாதனைகள் புரிந்தவண்ணம் உள்ளனர். இதற்காக, சளைக்காமல் ஊக்கமளித்து வரும் எம் பள்ளியின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகள், அயராது பாடுபட்டு வரும் எம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், எம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் - குறிப்பாக, இம்மாணவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வரும் முன்னாள் மாணவர் சதக் இப்றாஹீம் ஆகியோரையும், ஆட்டக்களங்களில் அருமையாக விளையாடி, பல வெற்றிகளைக் குவித்து வரும் எனதன்பிற்குரிய மாணவர்களையும் நான் மனமகிழ்வுடன் பாராட்டுகிறேன்...
இச்சாதனையைப் பாராட்டி, எம் பள்ளியின் தலைவர், தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் விரைவில் சிறப்பு நிகழ்ச்சியொன்றை நடத்தி, சாதனை அணிக்கு சிறப்பு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
நான் பணி ஓய்வு பெறப்போகும் இந்த இறுதியாண்டில், எம் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றதைப் போல, நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளிலும் மாநில அளவில் முதலிடம் பெற்றால், அதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்கப்போவதில்லை. அந்த வாய்ப்பை வல்ல இறைவன் எம் பள்ளிக்கு வழங்க வேண்டும் என இந்நேரத்தில் நான் மனதார பிரார்த்திக்கிறேன்...
பள்ளி வரலாற்றிலேயே முதன்முறையாக, கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று எம் பள்ளி சாதனை புரிந்துள்ளதை எண்ணுகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... இதற்காக அணி வீரர்களுக்கு பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களெல்லாம் வழங்கப்பட்டுள்ளது... இப்பரிசுகள் அனைத்தும் மாணவர்களுடனேயே சென்று விடும்.
அதே வேளையில், இவ்வளவு பெரிய சாதனைக்காக, பள்ளிக்கு ஒரு கோப்பையையோ, கேடயத்தையோ வழங்கியிருந்தால், அது ஆண்டாண்டு காலத்திற்கும் பள்ளியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதாவது, ஒரு பெரிய சரித்திரம் பாதுகாக்கப்படும். அந்த வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியதே!
இவ்வாறு பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, மாநில அளவில் பள்ளியின் கால்பந்து அணியினர் சாதனை படைத்த விபரங்களை, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார்.
பின்னர், கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை வென்ற பள்ளியின் வீரர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் முன்னிலை வகித்த பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் ஆகியோரும், தலைமையாசிரியரும் - அனைத்து மாணவர்கள் முன்னிலையில், சாதனை வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசுகளை வழங்கி பாராட்டினர். பள்ளியின் அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் கரவொலியெழுப்பி, அவர்களை ஊக்கப்படுத்தினர்.
பின்னர். பள்ளியின் ஜூனியர் பிரிவு கால்பந்து வீரர்கள் சார்பில், சாதனை வீரர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அணித்தலைவர் அதனைப் பெற்றுக்கொண்டார்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
|