கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் பத்து கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இது வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
கல்வியில் மேன்மை, விளையாட்டுப் போட்டிகளில் திறமை ஆகிய இரண்டும் இளைஞர் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. கல்வியின் மேன்மை அறிவாற்றலை வளர்க்கும். விளையாட்டுத் திறமை உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும். அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் இன்றியமையாதது என்பதால், இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களை 500 ஆக உயர்த்தியது போன்ற எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகளிடையே உள்ள விளையாட்டுத் திறனை வெளிக் கொணரும் வகையில், 2012 – 2013 ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளிடையே மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகை வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ரூ.30.00 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கிட ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5,000/-, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3,000/-, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000/- மற்றும் சான்றிதழ்களும்
பதக்கங்களும் வழங்கப்படும்.
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சுற்றுச் சூழ்நிலை நிலைமைக்கு ஏற்ப, விளையாட்டுப் போட்டிகள் நடத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் 2012 – 2013 ஆம் ஆண்டு முதல் கடற்கரை
மாவட்டங்களில் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் பத்து கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, பத்து கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தொடரா மானியமாக ரூ.20.00 லட்சமும் தொடர் மானியமாக ரூ. 5.00 லட்சமும் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், இதில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.3,000/- இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000/- மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000/- மற்றும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.
சென்னை ஓப்பன் டென்னிஸ் மற்றும் சென்னை ஓப்பன் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று 2013 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னை ஓப்பன் சூப்பர் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளையும் நடத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இப்போட்டிகளை நடத்திட தொடர் மானியமாக ரூ.1.00 கோடி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் சென்னை ஜவஹர்லால் நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் பல்வேறு நவீன வசதிகளுடன், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. அச்சமயம் அங்கு நிறுவப்பட்ட குளிர்சாதன வசதிகள் மற்றும் ஒளிவிளக்கு வசதிகள், காலத்தினால் பழமையடைந்து விட்டதால், இவைகளை மாற்றியமைக்கவும், உலகத்தரம் வாய்ந்த ஒலியமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வசதிகளை ஏற்படுத்திட ரூ.5.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
|