காயல்பட்டினம் நகராட்சி மன்றம் அமைந்துள்ள பஞ்சாயத் வீதியில், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இறைவழிபாட்டுத்தலம் - மஸ்ஜித் அவசியம் என அப்பகுதி மக்கள் கருதினர்.
அதனடிப்படையில், தோல்சாப் குடும்பத்தைச் சேர்ந்த - காலஞ்சென்ற ஷேக் அப்துல் காதிர் ஜீலானீ என்பவர் - அப்பகுதியில் பள்ளிவாசல் கட்டுவதற்காக, தனக்குச் சொந்தமான 7600 சதுர அடி நிலத்தை நன்கொடையாக அளித்து வக்ஃப் செய்திருந்தார்.
அவ்விடத்தில், சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில், ‘மஸ்ஜித் ஜீலானீ’ என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 25.01.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி கட்டுமானப் பணிக்குழு தலைவர் மவ்லவீ ஊண்டி செய்யித் முஹம்மத் பாக்கவீ நிகழ்வுக்குத் தலைமையேற்று, துஆ இறைஞ்சி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நகரப் பிரமுகர்கள் இறைப் பிரார்த்தனையைப் பெற்று அடிக்கல் நாட்டப்பட்டது. காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி கட்டுமானப் பணிக்கான பொறுப்பை, நகரிலுள்ள தனியார் கட்டிட நிறுவன அதிபர்களிடம் பள்ளி கட்டுமானப் பணிக்குழு தலைவர் முறைப்படி கையளித்தார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, அதன் பொருளாளர் எம்.எம்.முஹம்மத் சுல்தான், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் தாஜுத்தீன், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி தலைவர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, ஜாவியா அரபிக்கல்லூரியின் நிர்வாகி ‘கலீஃபத்துல் குலஃபா’ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன், செய்யிதினா பிலால் பள்ளியின் பொருளாளர் மவ்லவீ இஸ்மாஈல் மஹ்ழரீ, ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் உள்ளிட்ட நகர பிரமுகர்களும், அப்பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி கட்டுமான பணிக்குழு துணைத்தலைவர்களான ஹாஜி எம்.ஏ.புகாரீ, எம்.எஸ்.மிஸ்கீன் ஸாஹிப், செயலாளர் தோல்சாப் அஹ்மத் சுலைமான், துணைச் செயலாளர் எஸ்.எச்.பஷீர் அஹ்மத், பொருளாளர் ஹாஜி எச்.எம்.அப்துல் காதிர், துணைப் பொருளாளர் ஹாஜி ஜெய்னுத்தீன் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
பள்ளிவாசலுக்கான இடம் தவிர, இதே இடத்தில் சுமார் 1500 சதுர அடி பரப்பளவில் பெண்களுக்கான வழிபாட்டுத் தலம் - தைக்கா கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
கஸ்வா ஜெம்ஸ் காதிர்
[செய்தியில், பள்ளியின் பெயர் ‘மஸ்ஜித் ஜீலான்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘மஸ்ஜித் ஜீலானீ’ என்பதே சரியான பெயர் என்பதால், அது திருத்தப்பட்டது @ 00:02 / 29.01.2013] |