காயல்பட்டினம் பரிமார் தெருவில் அடங்கியருக்கும் மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் 101ஆவது ஆண்டு கந்தூரி நிகழ்ச்சிகள் 29.12.2012 முதல் 01.01.2013 வரை தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், மஹான் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும் - காயல்பட்டினம் கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் தலைமையில் நடைபெற்றது.
அன்று இஷா தொழுகைக்குப் பின், மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று சரித சொற்பொழிவு நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சொற்பொழிவு நிகழ்த்தினார்.
30.12.2012 ஞாயிற்றுக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், பால்குட ஊர்வலம், மஃரிப் தொழுகைக்குப் பின், மீராஸாஹிப் தலைமையில் தஃப்ஸ் நிகழ்ச்சி, இஷா தொழுகைக்குப் பின் பேண்டு வாத்தியத்துடன் யானை - பல்லக்கு ஊர்வலம், சிலம்பாட்டம் ஆகியன நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
31.12.2012 திங்கட்கிழமையன்று தாயிரா குழுவினரின் பக்கீர் பாபா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 01.01.2013 செவ்வாய்க்கிழமையன்று இரவில், பாடகர் ஆழ்வை உஸ்மானின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளனைத்திற்கான ஏற்பாடுகளையும், மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் இளைஞர் சங்கத்தினரை உள்ளடக்கிய கந்தூரி கமிட்டியினர் செய்திருந்தனர். |