இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில், வழமை போல இவ்வாண்டும் - ரபீஉல் அவ்வல் 12ஆம் நாளான - 25.01.2013 அன்று மீலாத் விழா நடைபெற்றது.
மீலாத் விழாவை முன்னிட்டு, 19.01.2013 சனிக்கிழமையன்று காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் குத்துக்கல் தெரு ரஹ்மத் பெண்கள் தைக்காவில் மகளிருக்கான பேச்சுப் போட்டியும், மறுநாள் 20.01.2013 மன்று மகளிருக்கான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியும் நடைபெற்றது.
19.01.2013, 20.01.2013 - சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும், மாலை 04.00 மணியளவில், மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் சன்மார்க்கப் போட்டிகள் மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
23.01.2013 புதன்கிழமையன்று காலை 09.00 மணியளவில், மஹ்ழரா அரபிக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது.
25.01.2013 வெள்ளிக்கிழமை காலை 07.00 மணியளவில் ஃபர்ஸன்ஜி மவ்லித் ஓதப்பட்டது. அன்று மாலையில் வெளியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார். மஹ்ழரா குர்ஆன் மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர் அஹ்மதுல்லாஹ் பைத் அனைவராலும் நின்றோதப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மஹ்ழரா துணைத்தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் தலைமையுரையாற்றினார். அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது.
மஃரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்த நிகழ்ச்சியில், மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் சன்மார்க்கப் பாடல் பாடினர்.
அதனைத் தொடர்ந்து, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ சிறப்புரையாற்றினார்.
பின்னர், நகரின் ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேடையில் அங்கம் வகித்தோர் அவற்றை வழங்க, பயனாளிகள் சார்பில் நகரப் பிரமுகர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு, மஹ்ழரா மீலாதுர்ரஸூல் கமிட்டி விழாக்குழு தலைவர் ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர் பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, நாகை மாவட்டம் - தேரிழந்தூர் அர்ரஹீமிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.ஷாஹுல் ஹமீத் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
மஹ்ழரா மீலாதுர்ரஸூல் கமிட்டி விழாக்குழு செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நன்றி கூற, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி இமாம் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுற்றன.
இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ‘தபர்ருக்’ நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, மஹ்ழரா மீலாது விழாக் குழுவினர் செய்திருந்தனர். காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியிலும், அதன் இணையதளத்திலும் நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட்டது.
படங்கள்:
K.M.T.சுலைமான் |