இவ்வாண்டு, இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட - பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இறுதிப்போட்டியில் வென்று, கோப்பையைத் தட்டிச்சென்று சாதனை புரிந்துள்ளது.
இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
17 வயதுக்குட்பட்டோருக்கான (சீனியர் பிரிவு) வட்டார அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியை வீழ்த்தி, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினர் 2–1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளியை வென்று மண்டல (டிவிஷனல்) அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றது.
கோவில்பட்டியில் அக்டோபர் மாதம் நடைபெற்ற மண்டல அளவிலான இறுதிப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியினர், பாளையங்கோட்டை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி அணியினருடன் விளையாடினர். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்.
64வது இந்திய குடியரசு தின விழாவையோற்றி மாநில அளவிலான (சீனியர் பிரிவு) கால்பந்தட்டப் போட்டிகள் தஞ்சாவூரில் வைத்து நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டி நேற்று 26.01.2013 மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் எல்.கே. மேனிநிலைப்பள்ளி மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப்பள்ளி அணியினரும் களமிறங்கினர். ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தனர். இதனால் சமனுடைப்பு - டை ப்ரேக்கர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-2 என்ற கோல் விகிதத்தில் வெற்றிப்பெற்று குடியரசு தின வெற்றிக் கோப்பையை தட்டி சென்றனர்.
கடந்த ஆண்டு இதே போன்று நடைபெற்ற குடியரசு தின போட்டியில், இறுதிப் போட்டி வரை முன்னேறி எம் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினரை பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |