இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், ஜனவரி 26 அன்று (நேற்று) நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் வழமை போல இவ்வாண்டும் பட்டம் பறக்க விடும் போட்டி - 26.01.2013 அன்று (நேற்று) காலை 08.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 3 பிரிவுகளாக நடைபெற்றது.
போட்டிகளைத் தொடர்ந்து, அன்றிரவு 07.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை விழாவிற்குத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜி பீர் முஹம்மத், செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, டாக்டர் செய்யித் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி ஏ.எஸ்.அஷ்ரஃப் போட்டி குறித்த அறிமுகவுரையாற்றினார். கலாமீ யாஸர் அரஃபாத் நன்றி கூறினார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், உள்ளூர் சிறுவர்களுக்கான - 2 அடிக்குட்பட்ட பட்டங்கள் பறக்க விடும் – முதல் பிரிவு போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற ஹஸன், எம்.முஜீப், எம்.பேச்சிமுத்து ஆகியோருக்கு முறையே ரூபாய் 1000, 500, 250 என பணப்பரிசுகள் வழங்கப்பட்டது. டாக்டர் செய்யித் அஹ்மத் அப்பரிசுகளை வழங்கினார்.
4 அடிக்குட்பட்ட பட்டங்களைப் பறக்கவிடும் இரண்டாவது பிரிவில் முதல் மூன்றிடங்களை வென்ற காலரி பேர்ட்ஸ், எஸ்.மாஹின், ஆதம் அப்பாஸ் ஆகியோருக்கு முறையே ரூபாய் 2000, 1000, 500 என பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா அப்பரிசுகளை வழங்கினார்.
4 அடிக்கு மேற்பட்ட பட்டங்களைப் பறக்கவிடும் மூன்றாவது பிரிவில் முதல் மூன்றிடங்களை வென்ற முத்து ராஜா, டி.ராஜா, ஜெ.கார்த்தி ஆகியோருக்கு முறையே ரூபாய் 3000, 2000, 1000 என பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சி நெறியாளர், நடுவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை ஹாஜி பீர் முஹம்மத், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை ஆகியோர் வழங்கினர்.
பட்டங்களின் அழகு, வடிவமைப்பு, பறக்கும் உயரம், இலுவை பலம், நிலைத் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பரிசுக்குரியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்வுகள் அனைத்திலும், இளைஞர்கள் - சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். போட்டி ஏற்பாடுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
களம் & படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன் |