இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், ஜனவரி 26 அன்று (நேற்று) நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவு அருகில், வழமை போல இவ்வாண்டும், குடியரசு தினத்தன்று விழா நடத்தப்பட்டது.
துவக்கமாக, அன்று காலை 07.00 மணியளவில், மிதிவண்டி மெதுவோட்டப் போட்டி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 09.00 மணியளவில் அரங்க நிகழ்ச்சி துவங்கியது. விழா நிகழ்விடத்தை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்த இவ்விழாவில், துவக்கமாக கராத்தே பயிற்சியாளர் ஏ.இர்ஃபான் ஒருங்கிணைப்பில் கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
கராத்தே வீரரின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றிச் செல்லல், காரை ஏற்றிச் செல்லல், வீரர்களின் கைகளை நீட்டச் செய்து, அதன் மீது காரை ஏற்றிச் செல்லல், 7 வயது சிறுமியின் மீது 100 கிலோ எடையுள்ள பனிக்கட்டியை வைத்து சம்மட்டியால் உடைத்தல், கராத்தே வீரர்களின் சாகச நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு விருந்தாய் அமைந்தன.
அதனைத் தொடர்ந்து, 7 வயது சிறுமி எம்.எஸ்.பிரஷா, “நாம் பிறந்த மண் - இந்தியா” என்ற தலைப்பில் எழுச்சி உரையாற்றினார்.
நிறைவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மிதிவண்டி மெதுவோட்டப் போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற வீரர்களுக்கு முறையே ரூபாய் 1000, 750, 500 பணப்பரிசுடன், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுபோல, கராத்தே சாகச நிகழ்ச்சியை நடத்திக் காண்பித்த வீரர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், நகரின் சர்வ சமய பெரியோர், பொதுநல அமைப்பினர், நகரப் பிரமுகர்கள், வணிகர்கள், வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, சமூக ஆர்வலர் ஆர்.எஸ்.கோபால் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
A.K.இம்ரான்
மற்றும்
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |