பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஹாங்காங் நாட்டிற்குச் சென்றுள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞருக்கு கவ்லூன் மற்றும் துங்சுங் பகுதிகளில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க இரண்டாம் பாகம் நூலும் வெளியிடப்பட்டது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஹாங்காங் சென்றுள்ளார்.
‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி:
26.01.2013 சனிக்கிழமையன்று, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஃபஹீமிய்யா மஜ்லிஸ் சார்பாக, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற - உலகின் அனைத்து சமுதாய அறிஞர்களாலும் போற்றப்படும் இஸ்லாமிய ஞானக் கவிஞர் மவ்லானா முஹம்மத் ஜலாலுத்தீன் ரூமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் தொகுத்துருவாக்கப்பட்ட ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூல் இரண்டாம் பாக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு, முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமை தாங்கினார். ஹாங்காங் இந்திய முஸ்லிம் அசோஸியேஷன் தலைவர் ஹாஜி ஜஃபருல்லாஹ், ஹாஜி ஜலால், ஹாஜி பாட்சா, ஹாஜி நிஜாமுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் சுல்தான் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து, கவ்லூன் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், ‘மஸ்னவீ ஷரீஃப்’ தமிழாக்கம் இரண்டாம் பாகம் நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை, சிறப்பழைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வெளியிட, நிகழ்ச்சித் தலைவர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் அதனைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், சிறப்பாளர் உரையாற்றினார். முன்னிலை வகித்த கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் நன்றி கூற, ஹாங்காங் இந்திய முஸ்லிம் அசோஸியேஷன் செயலாளர் ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் துஆவிற்குப் பின், ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங்கில் வசிக்கும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
துங்சுங் நகரில் வரவேற்பு:
மறுநாள் 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில், ஹாங்காங் நாட்டின் மலைப்பகுதியான துங்சுங் சுற்றுலாத்தல நகரில் மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயை வரவேற்கும் பொருட்டு, Tung Chung தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில், Yat Tung Estate என்ற பகுதியில் அமைந்துள்ள ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தன் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக Tung Chung வந்திருந்த - ஹாங்காங் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், Island District Council உறுப்பினருமான பில் டான்ங், சிறப்பழைப்பாளரான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயின் வருகை குறித்து அறிந்துகொண்டு, நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி வரவேற்றார்.
அவருக்கு, “MUHAMMED (Peace be upon him) LEGACY OF A PROPHET“ எனும் தலைப்பிலான குறுந்தட்டை துங்சுங் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்க, அவர் அதனைப் பெற்றுக்கொண்டார்.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்
மற்றும்
S.A.R.காதிர் ஸாஹிப்
படங்கள்:
P.M.I.அப்துல் காதிர் |