ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் ஆஸாத் தெரு, நெய்னார் தெரு, அப்பா பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் முறைப்படி நடைபெறாததை சுட்டிக்காட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
மேற்படி பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, 26.02.2013 அன்று, நகராட்சி நிர்வாக மண்டல மேலாளர் மோகன் தலைமையில் குழுவினர் காயல்பட்டினம் வருகை தந்து, சாலைப் பணிகளைப் பார்வையிட்டுச் சென்றனர். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார். பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 07.03.2013 வியாழக்கிழமையன்று நண்பகல் 12.00 மணியளவில், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் காயல்பட்டினம் வருகை தந்தனர்.
துவக்கமாக, காயல்பட்டினம் ஆஸாத் தெரு சாலைப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், அப்பகுதி பொதுமக்கள் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த பின் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
மீண்டும் மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். அதிகாரிகளின் அழைப்பின் பேரில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செயலாளர் கே.எம்.டி.சுலைமான், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நேரில் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளவை குறித்து அதிகாரிகளிடம் விளக்கினர்.
பின்னர், இம்முறையீடுகள் குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் செல்வமணியிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டறிந்தனர்.
பின்னர், முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பா பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
காயல்பட்டினம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செயலாளர் கே.எம்.டி.சுலைமான், பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.
இவ்வாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |