தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார் IAS நேற்று திடீரென மாற்றப்பட்டார். இது குறித்து இன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுக்காவில் உள்ள வைப்பார் மற்றும் வேம்பார் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் - நேற்று (ஆகஸ்ட் 6), துணைக் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் வருவாய் அதிகாரி கதிரேசன் தலைமையில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மணல் சுரங்கங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெரிய அளவில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த பரிசோதனைகள் மாலை 6 மணிக்கு முடிவுற்றது. அதன் பிறகு தனக்கு மாற்றல் ஆணை கிடைத்ததை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார், இரு விசயங்களுக்கும் தொடர்பு உள்ளது எனக்கூற மறுத்துவிட்டார். அதிகாரி என்ற அடிப்படையில் மாற்றல் உத்தரவை ஏற்று புதிய பொறுப்பில் பணியாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
"கடலுக்கு அருகே 4 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ள அனுமதி பெற்றிருந்த இந்நிறுவனம், சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளியுள்ளது. அனைத்தும் அரசு நிலங்கள்" என மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் கூறினார்.
நேற்று நடந்த பரிசோதனைகள் - கடந்த மூன்று மாதங்களில் மணல் சுரங்கங்களில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பெரிய பரிசோதனைகள் ஆகும். மூன்று மாதங்களுக்கு முன் பீச் மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் சுரங்கங்களையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இந்த இரு நிறுவனங்களும் கார்னெட், இல்மைனைட், ரூட்டைல் மற்றும் மோனசைட் போன்ற கனிமங்களை மணலில் இருந்து எடுத்து - பெரும் அளவில் ஏற்றுமதி செய்கின்றன.
இவ்வாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
|