ஆறுமுகனேரியில் இன்று (புதன்கிழமை) மாலையில், கார் மோதியதில் உப்பளத்திற்குச் சென்று வந்த முதியவர் பலியானார்.
ஆறுமுகநேரி கமலா நேரு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆண்டி நாடார் (70). இவருக்குச் சொந்தமான உப்பளம் ஆறுமுகநேரி வடபுறமுள்ள கொட்டைமடைக்காடு என்ற பகுதியில் உள்ளது. அங்கு அவர் காலையில் சென்றுவிட்டு மாலைதான் வீட்டுக்கு வருவார்.
இன்று புதன்கிழமை காலையில் அதே போன்று சென்று வேலை பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ஆறுமுகநேரியிலிருந்து காயல்பட்டினம் செல்லும் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது காயல்பட்டினத்திலிருந்து வந்த கார் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். ஆண்டி நாடாருக்கு பட்டுக்கனி என்ற மனைவியும் 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
கார் மோதிய வேகத்தில் சாலையோரம் உள்ள உப்பளத்திற்குள் பாய்ந்தது. அதில் கார் டிரைவரான ஆத்தூரைச் சேர்ந்த அபுல் ஹஸன் மகன் அலாவுதீன் (46) தலையில் பலத்த காயமடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அலாவுதீன் தனது குடும்பத்தினருடன் மனைவியின் ஊரான காயல்பட்டினத்திற்கு வந்துவிட்டு, அவர்கள் தற்போது இருக்கும் ஆரணிக்கு செல்லும்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜகுமாரி நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, ஆண்டி நாடார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆண்டி நாடார் மகள் வீரலட்சுமி புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். |