காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் மற்றும் மார்க்க அறிஞர்களான ஆலிம்கள் பங்கேற்கும் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரமழான் 28ஆம் நாளில் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு நிகழ்ச்சி இம்மாதம் 07ஆம் தேதி புதன்கிழமையன்று (நேற்று) மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையிலும், பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு - நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் முத்தவல்லிகளாகவும், நிர்வாகிகளாகவும் வாழ்ந்து மறைந்த முன்னோர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, பெரிய குத்பா பள்ளியின் இமாமும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ வழிநடத்தினார்.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், நோன்புக் கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், கடற்பாசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டது.
நிகழ்வுகளனைத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் உட்பட சுமார் 250 பேர் பங்கேற்றனர்.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) குத்பா பெரிய பள்ளியில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |