அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 01 முதல் 16 வார்டுகள் வரை முழுமையாகவும், 18ஆவது வார்டில் பெரும்பாலோரிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. 17ஆவது வார்டு பொதுமக்களிடம் தற்போது விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களில், பல்வேறு காரணங்களால் விபரங்கள் சமர்ப்பிக்க முடியாமல் போன பொதுமக்களுக்காக இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் சிறப்பு முகாம், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் அங்கு முகாம் பணிகள் துவங்கியுள்ளது. 5 கணனி கருவிகளைக் கொண்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று சுமார் 250 பேரிடம் விபரங்கள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சொந்த ஊரான காயல்பட்டினம் வந்துள்ள பொதுமக்களும், உள்ளூரிலிருந்தும் சில காரணங்களால் முகாமில் கலந்துகொள்ள இயலாமற்போன பொதுமக்களும் இம்முகாமில் கலந்துகொண்டு, விபரங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வழிகாட்டப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகளவில் முகாமில் பங்கேற்பதைக் கருத்திற்கொண்டு, நாளை முதல் கூடுதலாக 8 கணனி கருவிகளை நிறுவி, மொத்தம் 13 கணனி கருவிகளைக் கொண்டு விபரங்கள் சேகரிக்கப்படும் என முகாம் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இம்முகாம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |