வி.வி.மினரல் குழுமத்தால் 2,39,712 மெட்ரிக் டன் அளவிலான தாது மணல் முறைகேடாக அள்ளபட்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறைய மணல் குவாரிகள் இருக்கிறது. பெரும்பாலும் அவைகள் வி.வி. மினரல் குழுமத்துக்கு சொந்தமானதாக இருக்கிறது. அந்த குழுமத்தை சேர்ந்த சில குவாரிகளில் விதி மீறல்கள் நடந்து வருவதாக புகார் வந்தது. அதாவது அனுமதிக்கப்பட்ட எல்கையைத் தாண்டி அதிகமாக மணல் அள்ளுவதாக மீனவர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து ரகசிய ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தேன். அந்த ஆய்வில் உண்மை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே அதிரடியாக ரெய்டு நடத்திட உத்தரவிடப்பட்டது. வருவாய்த்துறை, சுங்கத்துறை, காவல் துறை இணைந்து நடத்திய ரெய்டில் வைப்பாறு கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், நிலம் அளவை செய்யப்படாத நிலம் மற்றும் குத்தகை வழங்கபட்ட நிலத்திற்கு அருகிலுள்ள நில அளவை செய்யப்படாத 85.611 கனஅடி அளவிலான நிலப்பரப்பிலிருந்து 2,39,712 மெட்ரிக் டன் அளவிலான தாது மணல் முறைகேடாக அள்ளபட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அரசிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிதியிழப்பு தொடர்பான விபரம் குறித்து கணக்கிடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக வி.வி.மினரல் குழுமத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வி.வி.மினரல் குழுமத்திற்கு சொந்தமான மணல் குவாரிகளில் ஆட்சியர் ஆஷிஷ் குமார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், அவர் அங்கிருந்து நேற்றிரவே பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
www.tutyonline.com |