காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அறிவிக்கப்பட்ட படி, இன்று காலை 09.00 மணிக்குத் துவங்கியது. துவக்கத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, காலை 11.00 மணியளவில் சூடு பிடித்தது.
மொத்த வாக்காளர்களின் (பொதுக்குழு உறுப்பினர்களின்) எண்ணிக்கை 1374. A,B,C,D என நான்கு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டிருந்தது.
வாக்குச்சாவடி ‘A’-இல் 0001 முதல் 0349 வரை வரிசை எண்ணைக் கொண்ட வாக்காளர்களும்,
வாக்குச்சாவடி ‘B’-இல் 0350 முதல் 0686 வரை வரிசை எண்ணைக் கொண்ட வாக்காளர்களும்,
வாக்குச்சாவடி ‘C’-இல் 0687 முதல் 1026 வரை வரிசை எண்ணைக் கொண்ட வாக்காளர்களும்,
வாக்குச்சாவடி ‘D’-இல் 1027 முதல் 1374 வரை வரிசை எண்ணைக் கொண்ட வாக்காளர்களும்
வாக்குப்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி மண்டல கண்காணிப்பாளர் வஸீர் அஹ்மத் தலைமையில் தேர்தல் அதிகாரிகளும், அலுவலர்களும் தேர்தல் வாக்குப்பதிவுகளை முறைப்படுத்தி நடத்தி வருகின்றனர். அவரவர் நிழற்படங்கள் பதிக்கப்பட்ட - அடையாள அட்டைகளைக் கொண்டு, வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டு, முகவர்களின் ஒப்புதலுடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10.00 மணி நிலவரப்படி 168 பேரும்,
காலை 11.00 மணி நிலவரப்படி 344 பேரும்,
நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 478 பேரும்,
மதியம் 01.00 மணி நிலவரப்படி 563 பேரும்,
மதியம் 02.00 மணி நிலவரப்படி 609 பேரும்,
மதியம் 03.00 மணி நிலவரப்படி 650 பேரும்,
மதியம் 04.00 மணி நிலவரப்படி 673 பேரும்,
வாக்களித்தனர்.
இயலா நிலையிலுள்ளோருக்காக சர்க்கர நாற்காலி, தமுமுக நகர கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயலாநிலை வாக்காளர்களின் பொறுப்பாளர்கள் அவர்களை நாற்காலிகளில் வைத்து வாக்குப்பதிவுக்கு அழைத்துச் சென்றனர்.
தேர்தலை முன்னிட்டு, பள்ளி வளாகத்தைச் சுற்றி குறிப்பிட்ட தொலைவு வரை எல்லைக்கோடுகள் அனைத்திடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் சார்பாக, வாக்குச்சாவடி எல்லைக்கு வெளியே ஆங்காங்கே மேஜைகள் போடப்பட்டு, தேர்தல் வழிகாட்டுப் பணிகள் செய்யப்பட்டது.
மாலை 04.00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுற்றது. 4 வாக்குப் பெட்டிகளையும் மூடி முத்திரையிட்ட பின்னர் - வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய தேர்தல் அதிகாரி வஸீர் அஹ்மத், வாக்குப்பதிவின் முடிவில், மொத்தமுள்ள 1374 வாக்காளர்களில் 673 பேர் வாக்களித்துள்ளதாக முறைப்படி அறிவித்தார். இது 48.98 சதவிகித வாக்குப்பதிவாகும்.
வாக்குச்சாவடி வாரியாக, ஒவ்வொரு மணி நேரத்திலும் பதிவான வாக்குகளின் விபரப் பட்டியல்:-
இத்தேர்தல், பார்ப்பதற்கு நகரில் பாராளுமன்ற - சட்டமன்ற - உள்ளாட்சித் தேர்தல்கள் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்களிக்க வந்தோரும், வாக்களித்துச் சென்றோரும் பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆங்காங்கே குழுக்குழுவாக நின்றவாறு, வெற்றிவாய்ப்புகள் குறித்து பரபரப்புடன் விவாதித்து வருகின்றனர்.
மாலை 05.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, நிறைவில் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிவுகளின் படி அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு, புதிதாக 55 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பள்ளியின் தலைவர், செயலாளர், பொருளாளர், துணை நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
களத்தொகுப்பு:
‘நெட்காம்’ புகாரீ
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
A.K.இம்ரான்
[செய்தியில் கூடுதல் தகவல்கள், படங்கள், அசைபடம் இணைக்கப்பட்டது @ 17:02 / 13.10.2013] |