காயல்பட்டினத்திலுள்ள நலிந்தோர் நலனுக்காக, ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின், இம்மாதம் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் அபுல் காஸிம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அழைப்பை ஏற்று, குறித்த நேரத்தில் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டமைக்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்பு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் உரையாற்றினார். தன் வாழ்வில் முதன்முறையாக, நகர்நல அமைப்பொன்றின் துணைக்குழு உறுப்பினராகவும், கூட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கடமையாற்ற தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பொன்னான வாய்ப்பாகவும், தனக்குக் கிடைத்த பாக்கியமாகவும் தான் கருதுவதாக அவர் கூறினார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகள் எல்லா வகைகளிலும் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகப் புகழ்ந்துரைத்த அவர், மன்றத்திற்கென அதிகாரப்பூர்வ இணையதளமொன்றைத் துவக்கி, அதில் மன்றத்தின் சிறப்புமிக்க இச்செயல்பாடுகள் அனைத்தையும் அவ்வப்போது பதிவு செய்து வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தனது கருத்தையும் பதிவு செய்தார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
சிங்கப்பூரில் பணியாற்றுவதற்காக அண்மையில் வந்துள்ள ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம், மன்றத்தின் புதிய உறுப்பினராக அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டார். தனக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக, மன்ற நிர்வாகமும், உறுப்பினர்களும் அளித்த ஒத்துழைப்புகளுக்கு அவர் நன்றி கூறினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்ததுடன், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மன்ற நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
>> கல்வி மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதற்கெனவுள்ள குழுமத்தால் முறைப்படி விசாரிக்கப்பட்டுள்ளது.
>> பயன்படுத்தப்பட்ட நல்லாடை 3ஆம் கட்ட வினியோகத்திற்காக, தாயகம் காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
>> மன்றத்தால் அண்மையில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு, தத்தம் இல்லங்களிலிருந்து பல்சுவை உணவுப் பதார்த்தங்களை ஆயத்தம் செய்து எடுத்து வந்திருந்த அனைத்துறுப்பினர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி.
- இவை செயலர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்ததுடன், 2013ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான நிதிநிலை முன்னறிக்கையையும் சமர்ப்பித்தார். சிற்சில விசாரணைகளுக்குப் பின், கூட்டம் அவற்றுக்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
உதவி கோரும் விண்ணப்பங்கள் குறித்த விசாரணை அறிக்கை வாசிப்பு:
உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு நியமிக்கப்பட்ட - மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், துணைக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் ஆகியோரடங்கிய குழு, தொலைபேசி வழியான தன் விசாரணையை முறைப்படி முடித்துள்ளது.
விசாரணை அறிக்கையை, குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வாசித்தார்.
நிதியொதுக்கீடு:
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்கப்பட்டவற்றுக்கு, இந்திய ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் நிதியை செயற்குழு ஒதுக்கீடு செய்தது.
மருத்துவ உதவிகள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மூலமாகவே வினியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதியோர் சமூக நல உதவி:
மன்றத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட - முதியோர் சமூக நல உதவித் திட்டம், இறையருளால் நடப்பு கூட்டம் முதல் செயல்படத் துவங்குகிறது. இதற்கான தகுதியுள்ள பயனாளிகள் குறித்த விபரங்களை மன்ற உறுப்பினர்கள், செயலரிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர்.
இத்திட்டம் குறித்து, நடப்பு கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களுக்கு, செயற்குழு உறுப்பினர் சோனா அபூபக்கர் ஸித்தீக் விளக்க, அதன் தொடர்ச்சியாக, சிறப்பழைப்பாளர், இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், தனது முதுமை நிலையில் ஆதரவற்றிருக்கும் - நகரின் பெரியவர்களுக்கு இத்திட்டம் மிகுந்த பயனளிக்கும் என்றும், இதற்கான ‘ஸதக்கத்துன் ஜாரியா’ எனும் நீடித்த நன்மைகள், இதற்காகப் பங்களிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதுபோன்ற நல்ல திட்டங்களையெல்லாம் அழகுற சிந்தித்து, இத்திட்டத்தை சிங்கப்பூர் காயல் நல மன்றம் செயல்படுத்துவதாகக் கூறிய அவர், இதர மன்றங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ், உதவி பெற 6 பயனாளிகள் தகுதியுள்ளவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நடப்பு 2013 - அக்டோபர் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,500 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகையாகப் பெறுவர். பயனாளிகளின் நிலை குறித்து, செயற்குழு அவ்வப்போது பரிசீலித்து, அவர்களுக்கான உதவித் தொகையை நீட்டிக்கவோ, நிறுத்தவோ முடிவெடுக்கும்.
மருத்துவ உதவித்தொகை ஒப்புதல் குழு:
பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகையை இறுதி செய்து ஒப்புதலளிக்க, மன்ற துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், துணைச் செயலாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய், துணைப் பொருளாளர் முஹம்மத் உதுமான் ஆகியோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது.
இக்குழு, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மூலம் - மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்களைப் பெற்றுப் பரிசீலித்து, வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை குறித்து இறுதி முடிவு செய்யும்.
இதுகுறித்து, அவ்வப்போது விவாதித்து முடிவெடுப்பதற்காக, கைபேசியில் WhatsApp வசதியைக் கொண்டு ஒரு குழுமத்தை உருவாக்க, மேற்படி குழுவை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
செயற்குழு பணி மேலாண்மை:
மன்றத்தால் பொறுப்பேற்கப்படும் பணிகளைச் செய்கையில், நிர்வாகிகள் தமது பணிச்சுமைகளைக் குறித்து, அனைவரின் துணையுடன் குறித்த நேரத்தில் சிறப்புற செய்து முடித்திடுவதற்கு, அனைத்து உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஈடுபாடு இன்றியமையாததாகிறது. இதனை செயற்குழு பணி மேலாண்மை நடவடிக்கை மூலம் வெற்றிகரமாகச் செயல்படுத்திட தீர்மானிக்கப்பட்டது.
மன்ற நிர்வாகத்தில், செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளின் தகைமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விபரங்களை, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கூட்டத்தில் வாசித்தார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, 65 பயனாளிகளுக்கு, தலா ரூபாய் 1,450 பண மதிப்பைக் கொண்ட சமையல் பொருட்களடங்கிய பொதியை வழங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், இவ்வகைக்காக தாராள மனதுடன் பங்களிப்புச் செய்த அனைத்துறுப்பினர்களுக்கும், செயற்குழு உறுப்பினர் சோனா அபூபக்கர் ஸித்தீக் - மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் பொருட்பொதி குறித்த விபரங்களை கூட்டத்தில் தெரிவித்தார்.
மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஒருங்கிணைப்பில், விடுமுறையில் ஊரிலிருக்கும் மன்ற அங்கத்தினர் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன், இம்மாதம் 13ஆம் தேதி முதல் பயனாளிகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக, துணைக்குழு உறுப்பினர் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் நியமிக்கப்பட்டார்.
விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில், ஹாங்காங் - காயல் மாணவர் நல (KSWA) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இஸ்மாஈல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நடப்பு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களை துவக்கம் முதல் கூர்ந்து அவதானித்து வந்ததாகக் கூறிய அவர், பல்வேறு வகைகளில் நிதிகளைப் பெருக்கி, மன்றத்தின் சார்பில் நகர்நலப் பணிகள் உற்சாகத்துடன் தொடர்ந்து ஆற்றப்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தற்காலத்தில் எந்த நோயானாலும் அதற்கு சிறுநீர், இரத்தப் பரிசோதனைகள் மிகவும் அவசியமாவதாகவும், அந்த வகையில் அனைத்து வசதிகளையும் உட்கொண்ட மருத்துவ பரிசோதனை மையமொன்றை ஷிஃபா மூலம் காயல்பட்டினத்தில் நிறுவி, இப்பரிசோதனைகளை ஏழை-எளிய மக்கள் இலவசமாகப் பெற்றிட வழிவகை செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார். இக்கருத்தை, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துறுப்பினர்களும் வரவேற்றனர்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
பின்னர், மலாய் முறைப்படியான இரவுணவு அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறப்பட்டது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு, துணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டம் குறித்து, அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர் Admin Coordinator
காயல் நல மன்றம் - சிங்கப்பூர் |