காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் இம்மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்
ஆகியோரைத் தவிர இதர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருட்கள்:
காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்பதற்கு கோரப்பட்டுள்ள ஒப்பந்தப் புள்ளிக்கு அங்கீகாரம் அளித்தல்,
நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கும், தமிழக அரசால் வழங்கப்படும் உயிரி எரிவாயு (பயோகேஸ்) மையத்தை அமைப்பதற்குமான இடம் தேர்வு செய்தல்
உள்ளிட்ட கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒருவழிப்பாதையில் புதிய சாலை:
துவக்கமாக, ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை அங்கீகரிப்பது தொடர்பான கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதே பணிக்காக, கடைசியாகக் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிக்கு இதே ஒப்பந்தக்காரர் கோரிய தொகை விட, சுமார் 1 லட்சம் ரூபாய் கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அதுகுறித்து ஒப்பந்தக்காரருடன் பேச்சுவார்த்தை (Negotiation) நடத்தப்பட வேண்டுமென்று கூறினார்.
“அவ்வாறு செய்வதால், இன்னும் காலதாமதமாகுமா?” என, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் கேட்க, “பேச்சுவார்த்தையை ஒப்பந்தக்காரர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்றும், அவர் அதை ஏற்கவில்லையெனில் மீண்டும் புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும் என்றும், அதற்கு இன்னும் சில கால அவகாசம் எடுக்கும் என்றும் பணி மேற்பார்வையாளர் செல்வமணி கூறினார்.
இந்த ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ள ஏர்வாடி நாகூர் மீரான் என்ற ஒப்பந்தக்காரர், இதுவரை காயல்பட்டினம் நகராட்சியில் பல ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்றும், எதுவும் செய்யவில்லை என்றும், எனவே, அவர் ஒப்பந்தப்புள்ளி பெற்ற அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றித் தரவும், ஒப்பந்தக்காரர் தொய்வின்றி பணிகளை நிறைவேற்றச் செய்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும், 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கூறினர்.
உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள ஆவன செய்யப்படும் என நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணி கூறியதையடுத்து, இப்பொருளை அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க, தீர்மானம் நிறைவேறியது.
குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க இடம்:
அடுத்து, நகராட்சிப் பகுதியில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டவும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு மையம் அமைவதற்கான இடத்தைத் தேர்வு செய்திடவும் மேசைப் பொருளாக (Table Agenda) கூட்டப் பொருள் விவாதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் காயல்பட்டினம் நகராட்சிக்கு வந்ததுடன், மேற்படி பணிக்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் அடிப்படையில், 3 இடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(1) சர்வே எண் 392/5:
காயல்பட்டினம் 18ஆவது வார்டுக்குட்பட்ட - 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட நிலம் குறித்து துவக்கமாக விவாதிக்கப்பட்டது.
அவ்விடத்தில் பல ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கவும், எரிக்கவும் பயன்படுத்தி வருவதாகவும், அவ்விடத்தில் வேறு திட்டங்களைக் கொண்டு வருவதை தானோ, தன் வார்டு பகுதி மக்களோ ஆதரிக்க முடியாது என்றும் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறினார்.
அவ்விடத்தில் மயானம் அமைக்கவும், திடக்கழிவுக்காகவும் இடங்களை ஒதுக்கி, 1958ஆம் ஆண்டில் - அப்போதைய பஞ்சாயத்து போர்டு தலைவர் எம்.கே.டி.அபூபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முத்து நாடார் என்ற 01ஆவது வார்டு உறுப்பினர் முன்வைத்த பிரேணனை அடிப்படையில், விவாதித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ள தகவலை, தீர்மான நகலைக் காண்பித்து நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார்.
முன்னோர் அனைவரின் ஒப்புதலோடு அன்றே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்திற்கொண்டு இவ்விடத்தைத் தேர்வு செய்யலாமே என நகர்மன்றத் தலைவர் கேட்டார்.
இதுகுறித்த விவாதத்தின் முடிவில், இந்த இடத்தைத் தேர்வு செய்ய பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை.
அந்த சர்வே எண் நிலத்தில், மயானத்திற்காக நகராட்சி ஒதுக்கும் இடம் தவிர இதர புறம்போக்கு இடங்கள் அனைத்தையும் முறையாக நகராட்சி கையிலெடுத்து, தனியார் யாரும் அதை சொந்தம் கொண்டாட விடாமல் காப்பாற்ற வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை என 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் கூறினார்.
(2) சர்வே எண் 334/1, 334/2, 334/12, 334/15:
காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதி நுழைவு எல்லைக்கருகிலேயே உள்ள சர்வே எண் 334/1, 334/2, 334/12, 334/15 ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன் பெறப்பட்ட அரசு ஆவணத்தின் படியும், இதர ஆவணங்கள் படியும், அரசு புறம்போக்கு நிலமே என மாவட்ட ஆட்சியர் வருகையின்போது உறுதி செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில், எரிவாயு மையம் அமைக்க பரிசீலிக்கலாமா என்றும் நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார்.
இந்த இடத்திற்கும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை.
(3) சர்வே எண் 278:
முன்னாள் நகர்மன்றத் தலைவர் தருவதாகச் சொன்ன - சர்வே எண் 278 என்ற பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லை என்றும், மின்விளக்கு ஏற்பாடுகள் எதுவுமில்லை என்றும், இவையனைத்தையும் செய்திட பல லட்சங்கள் மக்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டியது வரும் என்றும், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருக்க, இச்செலவு தேவையற்றது என்றும் கூறிய நகர்மன்றத் தலைவர், நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இவ்விடத்தைத் தேர்வு செய்யலாம் என்றும், உயிரி எரிவாயு மையம் அமைக்க, சர்வே எண் 392/5, 334/1, 334/2 ஆகிய இடங்களுள் ஒன்றைத் தேர்வு செய்யலாமே என்றும் கூறினார்.
“ஐக்கியப் பேரவையோ, முன்னாள் நகர்மன்றத் தலைவரோ உங்களுக்குப் பிடிக்காது என்பதால், இவ்விடத்தை நீங்கள் ஏற்கப்போவதில்லை” என்று 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் ஆகியோர் கூறினர்.
“அவ்வாறு ஏற்கக்கூடாது என்ற நிலை எனக்கு இருக்குமானால், குப்பை கொட்டுவதற்கு இந்த இடத்தைத் தேர்வு செய்ய நான் கூற வேண்டிய அவசியமில்லையே?” என நகர்மன்றத் தலைவர் கேட்டார்.
“பெரும்பான்மை உறுப்பினர்களாகிய தாங்கள் 278 என்ற - முன்னாள் நகர்மன்றத் தலைவர் தரும் இடத்தையே குப்பை கொட்டவும், உயிரி எரிவாயு மையம் அமைக்கவும் தேர்ந்தெடுக்கக் கூறுவதாகவும், பெரும்பான்மை அடிப்படையிலேயே தீர்மானம் இயற்ற வேண்டும்” என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.
CRZ பகுதியில் அவ்விடம் உள்ளதாக முந்தைய நகர்மன்றத்தின்போதே ஆட்சேபணை பெறப்பட்டுள்ளதாகவும், CRZ தவிர்த்து இதர இடங்களைத் தேர்ந்தெடுப்பதாயின், முன்னாள் நகர்மன்றத் தலைவருக்குச் சேராத 3 சர்வே எண்களும் உள்ளதாகவும், அவர்களிடமெல்லாம் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்குள், தமிழக அரசால் காயல்பட்டினம் நகராட்சிக்குத் தரப்பட்டுள்ள உயிரி எரிவாயு மையம் அமைக்கும் திட்டம் கை நழுவிப் போய்விடும் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறுவதையே தீர்மானமாக எழுதுமாறு உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து கூறவே, CRZ தவிர்த்து இதர இடங்களை - நகராட்சியின் குப்பைகளைக் கொட்டுவதற்கும், உயிரி எரிவாயு அமைப்பதற்கும் தேர்வு செய்ய தீர்மானம் இயற்றப்பட்டது.
மாலை 06.15 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
நடைபெற்ற இக்கூட்டத்தின் முழு அசைபடப் பதிவைக் காண http://www.youtube.com/watch?v=rjKjzIiGhjo&list=PL7DVrd7wQwL9R9qbs83Ehp1CoT9xianyM என்ற இணைப்பில் சொடுக்குக. |