வரும் ஹஜ் பெருநாளன்று, கத்தரில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலை நடத்தப் போவதாகவும், 2014 ஜனவரி மாதம் 01ஆம் தேதியன்று, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் - குறுநீள் ஓட்டப்போட்டியை நடத்தப் போவதாகவும், அதன் தொடர்ச்சியாக, சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு அறிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 60ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், மன்றச் செயலாளர் வி.எம்.டி.அப்துல்லாஹ் தலைமையில், ‘காயல் நண்பர்கள் இல்ல’த்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் கோனா ஹபீப் ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றப் பொருளாளர் ‘டொஷிபா’ முஹ்யித்தீன் தம்பி மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்.
பின்னர், மன்றத்தின் சார்பில் நகரில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள நகர்நலப் பணிகள், அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள், அவற்றில் காணப்பட்ட நடைமுறை சிக்கல்கள், குறைகளைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்து, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் SKYPE Video Conferencing மூலம் விரிவாக விளக்கிப் பேசினார்.
அவரது உரைக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்த மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், நகர்நலப் பணிகளில் மன்ற நிர்வாகத்துடன் இணைந்து தொய்வின்றி - தொடர்ச்சியாகப் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார்.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
மன்றப் பொருளாளரால் நடப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் & பரிசோதனை முகாம்:
வழமை போல, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் நாளன்று, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் – குறுநீள் ஓட்டப் போட்டியை நடத்திடவும், அதன் தொடர்ச்சியாக, சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமை நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், முகாம் நடத்துவதற்கான இடங்கள் குறித்து பின்னர் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – சுப்ரதோ கோப்பைக்கு விளையாடிய எல்.கே.பள்ளிக்கு பாராட்டு:
புது டில்லியில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் சர்வதேச அளவிலான சுப்ரதோ கோப்பை கால்பந்துப் போட்டியில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்ட காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் வீரர்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாயிருந்த அனைவருக்கும், மன்றம் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 4 - அமெரிக்கா செல்லும் நகர்மன்றத் தலைவருக்கு வாழ்த்து:
அமெரிக்க அரசின் IVLP திட்டத்தின் கீழ், அந்த அரசின் விருந்தினராக அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களை மன்றம் மனதாரப் பாராட்டுவதோடு, அவரது பயணம் வெற்றி பெறவும், அதன் பலன் நமதூர் காயல்பட்டினத்திற்கு நிறைவாகக் கிடைத்திடவும் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 5 - ஒவ்வொரு பள்ளியிலும் வினாடி-வினா போட்டி:
ஆண்டுதோறும், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்காக மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியில், மாணவ-மாணவியரை முழுத் திறமையுடன் பங்கேற்கச் செய்திடும் நோக்குடன், நகரின் ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே வினாடி-வினா போட்டிகளை நடத்திடவும், அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களை இறுதிப் போட்டியில் மேடையேற்றவும், இக்கூட்டம் கொள்கையளவில் தீர்மானிப்பதுடன், அதற்கான செயல்திட்டம் குறித்து விரைவில் விவாதித்து முடிவெடுக்கவும் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 – ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்:
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஹஜ் பெருளன்று, மன்றத்தின் சார்பில் - கத்தர் வக்ராவிலுள்ள பூங்காவில், பெருநாளன்று மாலை 03.30 மணிக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்திடவும், அவ்வமயம் மன்றத்தினர் அனைவரும் பங்கேற்கும் வகையில் வினாடி-வினா உள்ளிட்ட பல்சுவைப் போட்டிகளை நடத்தி, மனமகிழ் பரிசுகளை வழங்கவும் இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், இந்நிகழ்வில் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹாஃபிழ் நூஹ் லெப்பை துஆவுடன், செயற்குழுக் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |