55 உறுப்பினர் பொறுப்பிடங்களைக் கொண்ட காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் இம்மாதம் 13ஆம் தேதியன்று (நாளை) தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, வெளியிடப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வேட்பு மனு தாக்கல், பள்ளியின் முதல் தளத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி மண்டல கண்காணிப்பாளர் வஸீர் அஹ்மத், தூத்துக்குடி வக்ஃப் ஆய்வாளர் செய்யித் வாஜித் ஆகியோர் விண்ணப்பதாரர்களிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். பின்னர், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு தேர்தல் பள்ளி வளாகத்தில், வக்ஃப் வாரிய அதிகாரிகளால் நடத்தப்படவுள்ளது.
பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக உள்ள அனைவரும், தேர்தல் களத்திலுள்ள 67 பேரில், அதிகபட்சம் 55 பேருக்கு வாக்களிக்க வேண்டும். கூடுதலான வாக்குகளைப் பெறும் முதல் 55 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வாக்காளர்கள், தமது நிழற்படத்தைக் கொண்ட - வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம், பான் கார்டு உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றின் அசல் பிரதியை வாக்குப்பதிவின்போது எடுத்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு, பள்ளியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. |